
தமிழ்நாட்டில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையில்தான் போட்டி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வரும் 2026-ல் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக அதிமுக ஒருபுறம் கூட்டணியை வலுப்படுத்திக்கொண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் வேளையில் உட்கட்சிப் பூசல்களையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டை ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :
2026 சட்டமன்ற தேர்தலில் 210 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்பதுதான் எங்கள் லட்சியம். தமிழகம் முழுவதும் இதுவரை 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மக்களை சந்தித்துள்ளேன்.
இந்த மக்கள் சந்திப்பு பயணத்தின் போது, 52 மாத மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்கிற உணர்வை அவர்கள் மூலமாக நாங்கள் தெரிந்து கொண்டோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால், தங்களுக்கு நல்லது நடக்கும் என மக்கள் நினைக்கின்றனர். அதிமுக- பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. நீட் விஷயத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்பதை மக்கள் உணர்ந்து வைத்திருக்கிறார்கள். 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மை பலத்துடன் வென்று தனித்து ஆட்சியைக் கைப்பற்றும்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2026-ல் தவெகாவுக்கும் திமுகவுக்கும்தான் போட்டி என்று விஜய் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு “சட்டமன்ற தேர்தலில் ஆளும் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி” என்று பதிலளித்தார்.
EPS | Edappadi Palaniswami | DMK | ADMK | TN Elections 26 | TN Politics |