உதயநிதிக்கு நெருக்கமானவர் என்பதால் இர்ஃபான் மீது நடவடிக்கை இல்லை: இபிஎஸ் விமர்சனம்

"குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தியதற்கும் இர்ஃபான் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை என்பது புரியாத புதிர்."
உதயநிதிக்கு நெருக்கமானவர் என்பதால் இர்ஃபான் மீது நடவடிக்கை இல்லை: இபிஎஸ் விமர்சனம்
2 min read

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமானவர் என்பதால், யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை இல்லை என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத் துறை செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத்தை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி 4 பக்கங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் கடந்த காலங்களில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் ஏற்பட்ட பிரச்னைகளை அடுத்தடுத்து அடுக்கியுள்ளார். யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்கப்படாததையும் அவர் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

"தமிழ்நாட்டில் தற்போது நடைபெறும் நிர்வாகத் திறனற்ற ஸ்டாலினின் விடியா திமுக ஆட்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறையா? அல்லது மக்களின் உயிரைப் பறிக்கும் துறையா? என்ற சந்தேகம் அப்பாவி மக்களின் மனதில் எழுந்துள்ளது. அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்குக் கடந்த 42 மாதகால திமுக ஆட்சியில் நடைபெறும் கொடுமைகள் கணக்கிடலடங்கா!

2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து மருத்துவத் துறையில் தொடர்ந்து நடக்கும் பல விரும்பத் தகாத நிகழ்வுகளை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் அடிக்கடி இந்த அரசின் கவனத்துக்கு சுட்டிக்காட்டி வரும் நிலையில், அவைகளைத் தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல், எனக்கு முரண்பாடான பதில்களை அளிப்பதிலேயே இந்தத் துறையைக் கவனிக்கும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் குறியாக இருந்து, திறமையற்ற முறையில் செயல்படுகிறாரே தவிர, மக்களின் உயிரைக் காக்கும் பணியில் அக்கறையின்றி இருப்பது வேதனையான ஒன்றாகும்.

சட்டவிரோதமாக செயல்பட்டு, 'குழந்தையின் தொப்புள் கொடியை அறுத்த யூடியூபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பேன்' என்று முதலில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், அந்த நபர் வாரிசு அமைச்சர் உதயநிதியுடன் அமர்ந்து சாப்பிடும் காட்சிகள் வெளிவந்தவுடன் அப்படியே பம்மி பதுங்குவதும், இது கொலைக் குற்றமா என்று பத்திரிகையாளர்களிடம் கேள்வி கேட்பதும் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, இந்த யூடியூபர் இர்ஃபான், குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தியதற்கும் எந்தவிதமான நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கவில்லை என்பது புரியாத புதிர்.

அதிமுக ஆட்சியில் சாதனைத் துறையாக விளங்கிய மக்கள் நல்வாழ்வுத் துறை, ஸ்டாலினின் விடியா திமுக ஆட்சியில் சர்ச்சைக்குரிய துறையாக மாறி, நோயாளிகள் உயிருடன் விளையாடுவது கடும் கண்டனத்துக்குரியது.

தவறிழைத்தவர்கள் சாமான்ய மக்களாக இருந்தால், அவர்களுக்கு சட்டத்தைத் தீவிரமாக கடைபிடிப்பதும், உச்ச குடும்பத்துக்கு நெருக்கமானவர்களாக இருந்தால் சட்டத்தைக் காற்றில் பறக்கவிடுவதுமாக, மக்களைக் காக்கும் மருத்துவத் துறையை சீரழித்து, முதல்வரின் குடும்பத்துக்குக் கொத்தடிமை வேலை பார்ப்பவர்கள் மட்டுமே அமைச்சர்களாக செயல்படுவார்கள் என்பது எழுதப்படாத விதி ஒன்றை முதல்வர் மு.க. ஸ்டாலின் உருவாக்கி செயல்படுவது சர்வாதிகாரத்தின் உச்சம்" என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in