முதல்வர் வெற்றுச் சுவரை பார்த்து வெட்டி வசனம் பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami |

வெளிநடப்பு செய்த பிறகு வெற்றுச் சுவரைப் பார்த்து வெட்டி வசனம் பேசியிருக்கிறார் என்றும் விமர்சனம்...
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
2 min read

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகு முதல்வர் வெற்றுச் சுவரைப் பார்த்து வெட்டி வசனம் பேசியிருக்கிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கமளித்துப் பேசிய நிலையில், எடப்பாடி பழனிசாமி சில கேள்விகளைக் கேட்டார். அப்போது அமைச்சர் சிவசங்கர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பேசியதை எதிர்த்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அரசின் அலட்சியமும் காவல்துறையின் பாதுகாப்புக் குறைபாடும்தான் அசம்பாவிதம் நடக்கக் காரணம் என்று குற்றம்சாட்டினார்.

இதற்கிடையில் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த கேள்விகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பின்னர் பதிலளித்துப் பேசியிருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி சமூக ஊடகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

“சட்டப்பேரவையில் நான் பேச எழுந்தாலே பதறும் பொம்மை முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்ததும், வழக்கம் போல வெற்றுச் சுவரைப் பார்த்து வெட்டி வசனம் பேசியிருக்கிறார்.

இவரது அரசைக் குற்றம் சொல்ல முடியாமல் வெளியேறினோமாம். ஸ்டாலின் அவர்களே- நான் கேட்ட எந்தவொரு கேள்விக்கும் பதில் சொல்லத் தெரியாமல், அமைச்சர்கள் பின்னாலும், சபாநாயகர் பின்னாலும் ஒளிந்துகொண்டு, இப்போது உங்களுக்கு இந்த சினிமா வசனம் எல்லாம் தேவையா?

"எத்தனைக் காவலர்கள் கரூர் தவெக கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்?" என்ற கேள்விக்குக் கூட, உங்கள் பதிலுக்கும், உங்கள் காவல்துறையின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அளித்த பதிலுக்கும் முரண்பாடு இருக்கிறது. சட்டப்பேரவையில் கூட தெளிவான பதிலளிக்க முடியாத நீங்கள் கரூர் துயரச் சம்பவத்தை எந்த லட்சணத்தில் விசாரித்து இருப்பீர்கள் என்பதை தமிழக மக்கள் இன்று உணர்ந்திருப்பர்.

கரூர் துயரத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாரின் துக்கத்தில் பங்கேற்கும் வகையிலும், அவர்களின் சொல்லொண்ணா வலிகளையும் வேதனைகளையும் வெளிப்படுத்தும் வகையிலும் கருப்பு பட்டை அணிந்தால், அதையும் கிண்டல் செய்யும் தொனியில் உங்கள் சபாநாயகரும், அமைச்சரும், மிகக் கேவலமாகப் பேசினர்.

"ஆறு மாதத்தில் ஆட்சி போனதும், சிறை சென்றுவிடுவோமோ?" என்ற பயத்திலேயே உங்கள் அமைச்சர்கள் திரிவதாலோ என்னவோ, கருப்புப் பட்டையைக் கண்டால் கூட அவர்களுக்குச் சிறை ஞாபகம் தான் வருகிறது.

16-வது சட்டப்பேரவையில் உறுப்பினர் எல்லோரையும் சேர்த்து பேசியதை விட, அதிகமாக பேசிய பெருமைக்குரிய சபாநாயகரோ, கருப்புப் பட்டையைப் பார்த்து "ரத்தக் கொதிப்பா?" என்று கேட்கிறார்.

இப்போது சொல்கிறேன்- ஆம். ரத்தக் கொதிப்பு தான்.

ஒரு திறனற்ற அரசின் அலட்சியத்தால் 41 உயிர்களை இழந்த கோபத்தில் ரத்தம் கொதித்து தான் கருப்பு பட்டை அணிந்தோம். இந்த துயரத்தில் கூட கூச்சமே இல்லாமல் உங்கள் திமுக அரசு அரசியல் செய்கிறதே, அந்த ரத்தக் கொதிப்பில் தான் கருப்புப் பட்டை அணிந்தோம்.

ஸ்டாலின் அவர்களே! இன்று நீங்கள் ஒரு முதல்வராக பொறுப்போடு பேசுவீர்கள் என்று எண்ணினேன். ஆனால் நீங்களோ, உங்கள் கருர் சட்டமன்ற உறுப்பினர் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் இரண்டாம் பதிப்பைப் போல பேசியுள்ளீர்கள். உண்மை சுடும் என்பதை மட்டும் நினைவிற்கொள்க.” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in