
கரூரில் விஜய் பேசித் தொடங்கிய 10 நிமிடத்தில் செருப்பு ஒன்று வீசப்பட்டதைக் குறித்து அரசு ஏன் கருத்து கூறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2-ம் நாள் நிகழ்வான இன்று, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கமளித்துப் பேசினார். அதன் பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதனால் சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டார்கள். அதன் பின் சட்டப்பேரவையைப் புறக்கணித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தார்கள்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
“இன்றைய தினம் அதிமுக சார்பாக சட்டப்பேரவையில் விதி 56-ன் கீழ் பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை குறித்துப் பேரவை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், இது குறித்து முதலமைச்சர் ஒரு சில விளக்கங்களை அளிப்பார் என்று குறிப்பிட்டார்.
கரூர் சம்பவம் குறித்து பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் எங்கள் கருத்துக்களைத் தெரிவித்த பிறகு முதலமைச்சர் பதில் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்று குறிப்பிட்டேன்.
இன்றைக்கு 41 பேர் உயிரிழந்து மிகத் துயரமான சம்பவம் என்ற காரணத்தினால் நாங்கள் அமைதி காத்து முதலமைச்சர் சொன்ன கருத்துகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர் திமுக அரசு இந்தக் கரூர் நிகழ்வு குறித்து என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விவரத்தைத் தெரிவித்தார். அதற்குப் பிறகு பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் பேரவை விதி 56ன் கீழ் நான் பேசுவதற்காக அனுமதி கேட்டு அனுமதி கொடுத்தார்கள். அந்த அடிப்படையில் நான் பேச ஆரம்பித்தேன். அதில் பல கேள்விகளை வைத்தேன்.
குறிப்பாக, கடந்த செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் பேசத் தொடங்கிய 10-வது நிமிடத்தில் அவரை நோக்கிச் செருப்பு ஒன்று வந்தது. அதைப் பற்றி அரசு ஏன் எந்தக் கருத்தும் கூறவில்லை?
கரூர் கூட்ட நெரிசலில் சுமார் 41 பேர் இறந்திருக்கிறார்கள். அதில் 10 குழந்தைகள் 18 பெண்கள் 13 பேர் ஆண்கள் என்று தகவல் கிடைத்திருக்கிறது. ஸ்டாலின் தலைமையில் இருக்கும் அரசு இந்தக் கூட்டத்திற்கு முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் இந்த உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் இந்த அரசாங்கம் எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி ஆளுங்கட்சிக்கு ஒரு நீதியாகத்தான் பார்க்கிறது. கரூரில் நடந்த கூட்டத்திற்கு காவல்துறை முறையான பாதுகாப்பு அளிக்காததாலும், இந்த அரசின் அலட்சியத்தாலும்தான் 41 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஏற்கெனவே நான்கு மாவட்டங்களில் மக்கள் சந்திப்புக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். அந்தக் கூட்டங்களின் மூலமே எவ்வளவு மக்கள் அந்த நிகழ்ச்சிக்குப் பங்கேற்பார்கள் என்று காவல்துறைக்கும் உளவுத்துறைக்கும் தெரியும். அதற்கு ஏற்றவாறு இடத்தை ஒதுக்கியிருக்க வேண்டும். அவர்கள் கேட்ட இடத்தை ஒதுக்கவில்லை. அதோட எவ்வளவு மக்கள் வருகிறார்கள் அதற்கு ஏற்றவாறு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தால் உயிர்ச்சேதத்தைத் தடுத்திருக்கலாம் அதுவும் செய்ய இந்த அரசு தவறி விட்டது.
கரூரில் 500 காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்ததாக ஏடிஜிபி கூறினார். இன்று முதல்வர் 606 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதாகச் சொல்கிறார். இதிலேயே முரண்பட்ட கருத்து. இப்படிப்பட்ட காரணத்தால்தான் மக்களுக்கு இந்தச் சம்பவத்தில் மிகப்பெரிய சந்தேகம் அரசின் மீது ஏற்பட்டிருக்கிறது.
வேலுச்சாமிபுரத்தில் தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இடம், கடந்த ஜனவரி 24 அன்று எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நடத்த அதிமுகவால் கேட்கப்பட்டபோது, வேலுச்சாமிபுரத்தில் அதிகளவில் மக்கள் போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதாலும் குறுகிய சாலை என்பதாலும் கூட்டம் கூடும்போது இரண்டு புறம் முன் சாலை மறைக்கும் சூழல் ஏற்படும் இதனால் நாங்கள் கொடுக்க மாட்டோம் என்று கூறினார். அப்படி ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட இடத்தையே தவெகவுக்குக் கொடுத்தார்கள். அவர்களே நிராகரித்த இடத்தை அவர்களே எப்படிக் கொடுக்கலாம்?
ஏதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்பட வேண்டும் என்று திட்டமிட்டு உள்நோக்கத்தோடுதான் வேலுச்சாமிபுரத்தைக் கொடுத்திருக்கிறார்கள் என்றுதான் மக்கள் பேசுகிறார்கள். முழுமையாக இதுதான் உண்மை என்று நாங்களும் கருதுகிறோம். சம்பவம் நடந்த சில நாள்களுக்கு முன்புதான் திமுக முப்பெரும் விழா நடத்தினார்கள். அந்த இடத்தையே கொடுத்திருக்கலாமே.
இப்படிப்பட்ட சம்பவம் இந்த அரசால்தான் ஏற்பட்டது காவல்துறை அலட்சியத்தால், காவல்துறை முழுமையாக பாதுகாப்பு கொடுக்காமல் திட்டமிட்டுதான் நடைபெற்றதா மக்கள் சந்தேகிக்கிறார்கள்.
அதோட இந்த 41 பேர் இறந்திருக்கிறார்கள். உடனே அவசர அவசரமாக ஒரு நபர் கமிஷன் அமைக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அவசர அவசரமா பதட்டத்தோட உடற்கூறாய்வு நடத்தப்பட்டது. கரூர் அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்ய இரண்டு டேபிள்கள் தான் இருக்கிறது. அதுக்கு மின்விளக்குகள் எல்லாம் வேண்டும். அதுக்கு வேண்டிய வசதி எல்லாம் வேண்டும். அமைச்சர் 3 டேபிள்கள் இருப்பதாகச் சொல்கிறார். அப்படியே வைத்துக் கொண்டாலும், ஒரு உடலுக்கு உடற்கூறாய்வு செய்ய ஒன்றரை மணி நேரம் வேண்டும். அப்படி இருக்கையில், 3 மேஜைகளில் கிட்டத்தட்ட 39 பேருக்கு எப்படி உடற்கூறாய்வு செய்தார்கள் என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது.
ஒரு நபர் ஆணையம் அமைத்திருக்கிறார்கள், ஆனால் அவருக்கு தேவையான உதவியாளரை நியமிக்கவில்லை. அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை. ஓய்வுபெற்ற நீதிபதியும் போய் மக்களைப் பார்க்கிறார். அப்போது அவர் விசாரிப்பதை பதிவு செய்து கொள்ள நேர்முக உதவியாளர் இல்லை. ஆக இதையெல்லாம் உண்மைச் சம்பவத்தை மறைப்பதற்காக நாடகமாக அரசு அரங்கேற்றியது என்பது வெளிச்சமாக தெரிகிறது.
மேலும், தலைமைச் செயலகத்தில் மூன்று துறைச் செயலாளர்கள் ஒரு குழுவாக இருந்து பேட்டி கொடுத்தார்கள். பொதுவாக அரசின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக செய்தியாளர்களைச் சந்திக்கும் அதிகாரிகள், தவெக தலைவர் எதையெல்லாம் பின்பற்றியிருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது என்று சொல்கிறார்கள். ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு எந்த செய்தியாக இருந்தாலும் அவர்மூலமே வெளியிட வேண்டும். அதற்கு மாறாக அரசாங்கமே அரசு அதிகாரிகளை வைத்து இப்படி இந்த சம்பவம் நடைபெறுவதற்குக் காரணம் என்று விளக்கும்போது எப்படி ஒரு நபர் ஆணையம் நேர்மையாகச் செயல்பட முடியும்?
இதெல்லாம் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவ்வளவு பதற்றமாக இதையெல்லாம் செய்வதைப் பார்க்கும்போது வேண்டுமென்றே திட்டமிட்டுதான் இந்த நிகழ்வு நடத்தப்பட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கரூரில் 41 உயிர் போவதற்கு அரசின் அலட்சியமும் காவல்துறையின் பாதுகாப்புக் குறைபாடும் காரணமாக இருப்பது தெரிகிறது” என்றார்.