ராமேஸ்வரம் மாணவி கொலையில் குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையை உறுதி செய்க: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami |

தமிழ்நாட்டைப் பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்களே...
எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)ANI
1 min read

ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள சேராங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் மாரியப்பனின் மகள், அதே பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் இன்று காலை வழக்கம் போல பள்ளிக்குச் சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த முனிராஜ் என்பவர் மதுபோதையில் மாணவியை வழிமறித்துக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பி ஓடியுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மாணவி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்துச் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குற்றவாளி முனியராஜைக் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். அந்த மாணவியை முனியராஜ் காதலித்ததாகவும், அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்த நிலையில் கொலை செய்ததாகவும் தெரிய வருகிறது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டிருக்கும் குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாணவியை இளைஞர் படுகொலை செய்ததாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது எக்ஸ் தளப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“ராமேஸ்வரத்தில் தன்னை காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலைக்கு யார் பொறுப்பு? பட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது? ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே இத்தகைய கொடூரக் குற்றச் செயல்களுக்கு முழுமுதற் காரணம்.

மு.க. ஸ்டாலின் அவர்களே! “உங்கள் ஆட்சியில் அடுத்த நிமிடம் பாதுகாப்பாக இருக்க முடியுமா?” என்ற அச்சத்துடனே ஒவ்வொரு பொழுதையும் பெண்கள் கடக்க வேண்டிய அவலச் சூழல், தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு இல்லையா? இதற்கு நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டாமா? பெண்ணியம் போற்றும் தமிழ்நாட்டைப் பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்களே- இது உங்களை உறுத்தவில்லையா? ராமேஸ்வரம் பள்ளி மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Opposition Leader Edappadi Palaniswami has urged the Chief Minister to ensure that the culprit who murdered a schoolgirl in Rameswaram gets the maximum punishment.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in