சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அவதூறு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தார் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி.
நடந்துமுடிந்த 18-வது மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது, மத்திய சென்னை தொகுதியின் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் எடப்பாடி பழனிசாமி. மேலும் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை தயாநிதி மாறன் முறையாகச் செலவிடவில்லை என்றும் பரப்புரையில் பேசியிருந்தார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமியின் பரப்புரையை முன்வைத்து அவர் மீது எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார் தயாநிதி மாறன். இதனை தொடர்ந்து இந்த அவதூறு வழக்கு, சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயவேல் முன்பு இந்த அவதூறு வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் இருந்து எடப்பாடி பழனிசாமியை விடுவிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்தார் அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர். ஆனால் வழக்கை தொடர்ந்த தயாநிதி மாறன் விசாரணையின்போது நேரில் ஆஜராகவில்லை.
இதை அடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அக்.16-க்கு ஒத்திவைத்தார் நீதிபதி ஜெயவேல். மேலும் வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீது அக்.16-ல் முடிவெடுக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.