சிறப்பு தீவிர திருத்தம் என்றாலே திமுக அலறுகிறது: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami |

வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற சிறப்பு தீவிர திருத்தம் முக்கியம்...
எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
2 min read

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்று கேட்டாலே திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அலறுகின்றன, பதறுகின்றன என்று அதிமுக பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

கோவை விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

“தமிழ்நாட்டில் பாலியல் கொடுமையைத் தடுத்து நிறுத்துவதற்கு திராணியற்றதாக திமுக அரசாங்கம் இருக்கிறது. 6,999 சிறுமிகள் இன்றைக்கு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள் என்று சொன்னால், இந்த அரசாங்கம் எப்படி செயல்படுகின்றது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஒரு திறமையற்ற முதலமைச்சர், பொம்மை முதலமைச்சர் ஆண்டுகொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே, அவரிடத்தில் காவல்துறை இருந்தும், சரியான முறையில் நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலே இன்றைக்கு இப்படிப்பட்ட நிகழ்வுகள், தொடர்ந்து சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் அநீதி இழைக்கப்படுகின்றது. இப்படி கொடுமையான பாலியல் கொடுமைகள் நடந்துகொண்டிருக்கின்றன. கடந்த 50 மாத திமுக ஆட்சியில் சுமார் 6,400 கொலைகள் நடந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது என்பது இவற்றின் மூலம் தெரிகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட தமிழ்நாட்டில் முறையாக டிஜிபி நிரந்தர டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை. அரசு தங்களுக்கு வேண்டப்பட்டவர் ஒருவர் டிஜிபியாக வரவேண்டும் என்ற அடிப்படையில்தான் இதுவரை நிரந்தர டிஜிபி நியமிக்கவில்லை. இதனால்தான் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பராமரிக்கப்பட முடியாத ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது.

அதேபோல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை இன்றைக்கு மேற்கொண்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. முன்னர் எட்டு முறை இந்த சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்திருக்கின்றன. இன்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும், வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், வேறு இடத்திற்குக் குடிபெயர்ந்தவர்கள், வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளுக்குச் சென்றவர்கள் என்று பல்லாயிரக்கணக்கானோரின் பெயர்கள், பல ஆண்டுகளாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இப்படி முறைகேடாக இருக்கின்ற இந்த வாக்காளர்களை எல்லாம் நீக்கப்பட்டுத், தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்ற அடிப்படையில்தான் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முக்கியமாகிறது.

ஆனால் அதை எதிர்க்கும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சிறப்பு தீவிர திருத்தம் என்று கேட்டாலே அலறுகிறார்கள், பதறுகிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. இதில் என்ன தவறு இருக்கிறது?

காலம் போதாது என்று சொல்கிறார்கள். ஒரு மாத காலம் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பூத் நிலை அதிகாரியாக அரசு அலுவலரை நியமிக்கிறார்கள். அவர் வீடு வீடாகக் கொண்டுபோய் அந்தப் படிவத்தைக் கொடுத்து, பிறகு படிவம் பூர்த்தி செய்யப்பட்டு அதைத் திரும்பப் பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஒப்படைக்கிறார்கள். இதில் எந்தவிதக் காலதாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. ஏதோ சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்பட்டால் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமையே பறி போய்விடும் என்று தவறான செய்தியைப் பரப்பி வருகிறார்கள். இது கண்டனத்துக்கு உரியது. பாஜக - அதிமுக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்கும். எங்கள் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவாக அறிவித்துவிட்டார். செங்கோட்டையனைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. அது முடிந்து போன விஷயம். ” என்றார்.

Summary

AIADMK General Secretary Edappadi Palaniswami criticized that the DMK and its alliance parties panic and get flustered just at the mention of the Special Intensive Revision.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in