கோப்புப்படம்
கோப்புப்படம்

விருதுநகரில் பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

"காவல் துறையினர் உட்பட தமிழ்நாட்டில் அனைவருக்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும்."
Published on

விருதுநகரில் பெண் டிஎஸ்பி தாக்கப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் சரக்கு வாகன ஓட்டுநர் காளிகுமார் என்பவர் 4 பேர் கொண்ட கும்பலால் நேற்று வெட்டிக் கொல்லப்பட்டர். இவரது உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, காளிகுமாரின் உறவினர்கள் மருத்துவமனை வளாகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்கள். அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான காவல் துறையினர் போராட்டக்காரர்களைத் தடுக்க முயற்சித்தார்கள்.

அப்போது போராட்டக்காரர்களில் இருந்த சிலர் டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்தினார்கள். காவல் துறையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே லேசான தகராறு ஏற்பட்டது. டிஎஸ்பி காயத்ரி தாக்கப்பட்ட காணொளி இணையத்தில் அதிகளவில் பரவியது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

"விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போராட்டத்தின்போது கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரி அவர்களைப் போராட்டக்காரர்கள் தலை முடியை இழுத்து தாக்க முயன்றதாகச் செய்திகளில் வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.

விடியா திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!

மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையினருக்கே, தங்கள் பணியின்போது தாக்கப்படும் அளவு பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ள இந்த விடியா திமுக அரசுக்கும், பொம்மை முதல்வருக்கும் கடும் கண்டனம்.

அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரி அவர்களைத் தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி சீருடையில் உள்ள காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் யாருக்கும் வராத அளவிற்குத் தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும், காவல் துறையினர் உட்பட தமிழ்நாட்டில் அனைவருக்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துமாறும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

logo
Kizhakku News
kizhakkunews.in