
தூத்துக்குடி விமான நிலையத்தின் ஆங்கிலப் பெயரை மாற்றக்கோரி மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிற்கு தூத்துக்குடி மக்களவை எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.
ரூ.452 கோடி செலவில் பெரிய வகை விமானங்களும் தரையிறங்கும் வகையில் சர்வதேச தரத்துக்கு விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 26 ஜூலை அன்று திறந்து வைத்தார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 25 அன்று மத்திய அமைச்சருக்குக் கனிமொழி எம்.பி. எழுதிய கடிதத்தில் கூறியதாவது,
`Tuticorin Airport - தூத்துக்குடி விமான நிலையத்தை (IATA: TCR, ICAO: VOTK) Thoothukudi Airport - தூத்துக்குடி விமான நிலையம் என்று மறுபெயரிடுவதன் அவசியத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருவதற்காகவே நான் இதை எழுதுகிறேன்.
தற்போதைய பெயரான, `Tuticorin’ என்பது, அசல் தமிழ்ப் பெயரான தூத்துக்குடியின் காலனித்துவ காலத்தைச் சேர்ந்த ஆங்கிலப் பெயராகும். இப்பகுதியின் கலாச்சார மற்றும் மொழியியல் அடையாளத்தை அங்கீகரித்து, 1998-ம் ஆண்டு `Thoothukudi’ என்பதை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. இருப்பினும், விமான நிலையத்திற்கு `Tuticorin’ என்பதைத் தொடர்ந்து பயன்படுத்துவது முரண்பாட்டை உருவாக்குகிறது.
எனவே, Tuticorin - தூத்துக்குடி விமான நிலையத்தை, Thoothukudi - தூத்துக்குடி விமான நிலையம் என்று மறுபெயரிடுவதற்கான செயல்முறையைத் தொடங்கவும், அனைத்து பதிவுகள், பலகைகள் மற்றும் தளங்களில் இந்த மாற்றத்தை பிரதிபலிக்க இந்திய விமான நிலைய ஆணையம், பொது விமான போக்குவரத்து இயக்குநரகும் மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கவும்’ கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.