
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளாருமான கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இன்று (ஏப்ரல் 7) காலை 8 மணி அளவில் திமுக மூத்த அமைச்சர் கே.என். நேருவின் திருச்சி தில்லை நகர் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை தொடங்கியது. அதே சமயம் நேருவின் மகனும், பெரம்பலூர் எம்.பி.யுமான அருண் நேருவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை தொடங்கியது.
அதோடு, அமைச்சரின் தம்பி கே.என். ரவிச்சந்திரனுக்குச் சொந்தமாக கோவையில் உள்ள கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடங்களிலும், அமைச்சரின் சகோதரி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. ரவிச்சந்திரனின் வங்கிப் பரிவர்த்தனைகள் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சென்னையில் மட்டும் ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, எம்.ஆர்.சி. நகர், அடையாறு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் உதவியுடன் அமைச்சரின் திருச்சி வீட்டில் சோதனை நடைபெறத் தொடங்கியதும் அங்கே திமுக தொண்டர்கள் திரண்டனர். இதனால் சிறிது நேரம் அங்கே பரபரப்பு நிலவியது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நேரத்தில், திமுக மூத்த அமைச்சர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவது கவனம்பெற்றுள்ளது.