
திண்டுக்கல்லில் உள்ள மூத்த அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீடு, அவரது மகனும் பழநி எம்.எல்.ஏ.வுமான ஐ.பி. செந்தில்குமார் வீடு, அவரது மகள் இந்திரா வீடு ஆகிய இடங்களில் இன்று (ஆக. 16) காலை முதல் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சரான ஐ. பெரியசாமியின் வீடு திண்டுக்கல் மாநகரின் கோவிந்தபுரத்தில் உள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்ற புகாரின் கீழ் இன்று (ஆக. 16) காலை 7.30 மணி தொடங்கி அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அவரது வீட்டிற்கு வெளியே சி.ஆர்.பி.எஃப். வீரர்களும், காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சரின் வீட்டில் சோதனை நடக்கும் தகவல் தெரிந்தததும், வீட்டிற்கு வெளியே குழுமிய திமுக தொண்டர்கள் அமலாக்கத்துறையை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
மேலும், திண்டுக்கல் சீலப்பாடியில் உள்ள அமைச்சரின் மகனும், பழநி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஐ.பி. செந்தில்குமாரின் வீட்டிலும், அசோக்நகரில் உள்ள அமைச்சரின் மகள் இந்திராவின் வீட்டிலும், அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.
அதேபோல, சென்னை எம்.எல்.ஏ. விடுதியில் அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டுள்ள குடியிருப்பிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
அத்துடன், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம் பூட்டப்பட்டுள்ளதாகவும், இல்லத்தின் சாவியை வழங்க பணியாளர் மறுப்பதால், பூட்டை உடைத்து சோதனையிட அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.