
திமுக மூத்த அமைச்சர் ஐ. பெரியசாமி தொடர்புடைய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை குறித்து அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 16 அன்று தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் திண்டுக்கல் கோவிந்தபுரம் இல்லத்திற்கு காலை 7.15 அளவில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பாதுகாப்புடன் வருகை தந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அதேபோல திண்டுக்கல் சீலப்பாடியில் உள்ள அமைச்சர் பெரியசாமியின் மகனும், பழநி எம்.எல்.ஏ.வுமான ஐ.பி. செந்தில்குமாரின் வீடு, திண்டுக்கல் வள்ளலார் நகரில் உள்ள அமைச்சரின் மகள் இந்திராணியின் வீடு, திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் உள்ள இருளப்பா ஜவுளி மில், சென்னை அடையாறு பசுமைவழிச்சாலையில் உள்ள அமைச்சரின் அரசு வீடு, சென்னை எம்.எல்.ஏ. விடுதியில் செந்தில்குமாருக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பு ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
பல்வேறு இடங்களில் காலையில் தொடங்கி சோதனை அன்று இரவு நிறைவுற்றது.
கடந்த 2006-2011 திமுக அரசில் வீட்டுவசதி அமைச்சராக ஐ. பெரியசாமி இருந்தபோது அன்றைய காவல்துறை அதிகாரி ஜாபர்சேட் மனைவிக்கு தமிழக வீட்டுவசதி வாரியம் தரப்பில் முறைகேடாக இடம் ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிந்துள்ள நிலையில், இதில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. அது தொடர்பான ஆவணங்கள், ஆதாரங்களை சேகரிக்கவே இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் இன்று (ஆக. 18) வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியதாவது,
`16/08/2025 அன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, பழனி தொகுதி எம்.எல்.ஏ.வும் அவரது மகனுமான ஐ.பி. செந்தில் குமார் மற்றும் பிறர் தொடர்புடைய, தமிழ்நாட்டின் திண்டுக்கல் மற்றும் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு தொடர்பாக, 2002-ம் ஆண்டு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், சென்னை அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
சோதனைகளின்போது, சொத்துக்கள்/முதலீடுகள் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.