
2024-ல் எடுக்கப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை 3063 ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்தின் எல்லையோர மாவட்டங்களில் மே 23 முதல் 25 வரை `ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு' நடைபெற்றது. இந்தக் கணக்கெடுப்பில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என மொத்தம் 2,178 நபர்கள் ஈடுபட்டனர்.
2017 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,761 ஆக இருந்தது. இது 2023 கணக்கெடுப்பில் 2,961 ஆக உயர்ந்தது. இந்நிலையில் 26 வனப் பிரிவுகளில் மே 23 முதல் 25 வரை எடுக்கப்பட்ட 2024 யானைகள் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 3063 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு வன உயிரின பாதுகாப்பு நடவடிக்கைகள் குறிப்பாக `யானைகள் பாதுகாப்பு இயக்கத்தின்’ மூலமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் வாயிலாக தமிழ்நாட்டில் யானைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும், அகத்திய மலை யானைகள் காப்பகம், யானைகள் வாழிடங்கள் பாதுகாத்தது போன்ற தமிழநாடு அரசின் நடவடிக்கைகளும் தமிழ்நாட்டில் யானைகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்குப் போதுமான காரணங்களாக விளங்கியுள்ளன என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் யானைகள் கணக்கெடுப்பு, யானைகளின் எண்ணிக்கை, பாலின விகிதம், யானைகளின் இயக்கவியல் மற்றும் யானைகளின் வாழ்விடத்தை சிறப்பாக நிர்வகிப்பதற்குத் தேவையான தெளிவான விவரங்களை வழங்குகிறது.