தமிழ்நாட்டில் மின் கட்டணத்தைத் தொடர்ந்து மின் சேவைக் கட்டணங்கள் உயர்வு

வீடுகள், விசைத்தறி உபயோகம், அரசு கட்டிடங்கள், தொழில் பிரிவுகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான மின் இணைப்புக் கட்டணங்கள் உயர்ந்துள்ளன
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தைத் தொடர்ந்து மின் சேவைக் கட்டணங்கள் உயர்வு
1 min read

ஜூலை 1 முதல் மின் நுகர்வைப் பொருத்து, யூனிட் ஒன்றுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜூலை 15 முதல் புதிய இணைப்புக் கட்டணம், மீட்டருக்கான வைப்புத் தொகை, பதிவுக் கட்டணம், மேம்பாட்டு கட்டணம் போன்ற மின் சேவைக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.

மின் மீட்டருக்கான வைப்புத் தொகை, ஒரு முனை இணைப்புக்கு ரூ. 765-ல் இருந்து ரூ. 800 ஆகவும், மும்முனை இணைப்புக்கு திறன் வாரியாக ரூ. 2045, ரூ. 7050 மற்றும் ரூ. 8480 ஆக இருந்தது, ரூ. 2145, ரூ. 7390 மற்றும் ரூ. 8890 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் மீட்டருக்கான வைப்புத் தொகை, ஒரு முனை இணைப்புக்கு ரூ. 5315-ல் இருந்து ரூ. 5570 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ. 7255, ரூ. 8430 ஆக இருந்தது, ரூ. 7605, ரூ. 8835 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் உயர் மின் அழுத்த இணைப்புக்கான மீட்டர் வாடகை ரூ. 3780-ல் இருந்து ரூ. 3965 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.

வீடுகள், குடியிருப்புகளுக்கான பொது மின் உபயோகம், விசைத்தறி உபயோகம், அரசு கட்டிடங்கள், தொழில் பிரிவுகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றுக்கான மின் இணைப்புக் கட்டணங்கள், ஒரு முனைக்கு ரூ. 1020-ல் இருந்து 1070 ஆகவும், மும்முனைக்கு ரூ. 1535-ல் இருந்து 1610 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.

ரூ. 125, ரூ. 305, ரூ. 510 ஆக இருந்த மறு இணைப்புக் கட்டணங்கள், ரூ. 130, ரூ. 320, ரூ. 535 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் மின் இணைப்பின் பெயர் மாற்றத்துக்கான கட்டணம் குறைந்த மின் அழுத்த இணைப்புக்கு ரூ. 615-ல் இருந்து ரூ.645 ஆகவும், உயர் மின் அழுத்த இணைப்புக்கு ரூ. 6130-ல் இருந்து ரூ. 6425 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.

மின் மீட்டர், மின் இணைப்பு பெட்டி பழுது, மின் இணைப்பை வேறு இடத்துக்கு மாற்றுதல் போன்றவற்றுக்கான கட்டணங்கள், ஒரு முனை இணைப்புக்கு ரூ. 1020-ல் இருந்து ரூ. 1070 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ. 1535-ல் இருந்து ரூ. 1610 ஆகவும், உயர் மின் அழுத்த இணைப்புக்கு ரூ. 4085-ல் இருந்து ரூ. 4280 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in