சென்னையில் மின்சார பேருந்துகளின் பயன்பாடு தொடக்கம்!
முதல்முறையாக சென்னையில் 120 மின்சார பேருந்துகளின் பயன்பாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 20) தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகளை இயக்கும் வகையில் ஜெர்மனி வளர்ச்சி வங்கியுடன் தமிழக அரசு நிதி ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன்படி, 12 மீட்டர் நீளம் கொண்ட குளிர்சாதன வசதி, குளிர்சாதன வசதியில்லாத தாழ்தள மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்து வழங்க சர்வதேச அளவில் கடந்தாண்டு ஒப்பந்தம் கோரப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தில் தேர்வாகும் நிறுவனங்கள் தாழ்தள மின்சார பேருந்துகளை தயாரித்து வழங்குவதோடு, அவற்றை பராமரிக்கும் பணிகளையும் மேற்கொள்ளவேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. மின்சார பேருந்துகள் சென்னை, கோவை, மதுரை நகரங்களில் முதற்கட்டமாக இயக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, ரூ. 697 கோடி மதிப்பீட்டில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் 625 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரூ. 200 கோடி மதிப்பீட்டில் முதற்கட்டமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ள புதிய 120 தாழ்தள மின்சார பேருந்துகளின் பயன்பாட்டை சென்னை தண்டையார்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 30) காலை தொடங்கி வைத்தார்.
இந்த மின்சார பேருந்துகளில் ஒருமுறை மின்னேற்றம் செய்தால், 200 கி.மீ. வரை இயக்கலாம்.
அத்துடன் உலக வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் சென்னை பெருநகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ் 47.7 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட வியாசர்பாடி மின்சார பேருந்து பணிமனையை இந்த நிகழ்வில் முதல்வர் திறந்து வைத்தார்.