
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 448 உறுப்பினர்கள் பதவிகளுக்கு வரும் மே மாதம் இடைக்காலத் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019-ல் சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, புதிதாக 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அந்த 9 மாவட்டங்கள் தவிர்த்துப் பிற 27 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளான கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளைத் தேர்தெடுக்க 2019 டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, 2022 பிப்ரவரியில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலும், அதன்பிறகு தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2022 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 கட்டங்களாக தேர்தலும் நடைபெற்றன.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 25) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது,
`ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக உள்ள பதவியிடங்களுக்கு தற்செயல்/இடைக்கால தேர்தல்களை நடத்த ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர்களுக்கான காலிப் பதவியிடங்கள் உட்பட 35 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 133 காலிப் பதவியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 315 காலிப் பதவியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த காலிப் பதவியிடங்களுக்கு வரும் மே மாதம் தேர்தல் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை விரைவாக முடிக்க தொடர்புள்ள அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.