
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காலை 7 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
நாளை முதல் ஜூன் 1 வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
நாளை முதற்கட்ட வாக்குப் பதிவு 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சத்யபிரதா சாஹூ பேசியதாவது:
“874 ஆண் வேட்பாளர்கள், 76 பெண் வேட்பாளர்கள் என மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக 68,321 ஓட்டுச்சாவடிகள் தயாராக உள்ளன. பதற்றமான 8,050 ஓட்டுச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 6.23 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். கடைசி வாக்காளர் வாக்களிக்கும் வரை வாய்ப்பு வழங்கப்படும். சுமார் 1.3 லட்சம் மாநில காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். 44,801 வாக்கு பதிவு மையங்களில் வெப் கேமிரா நிறுவப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால் வாக்களிக்க இலவசமாக வாகனம் அனுப்பி வைக்கப்படும்” என்றார்.