தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகள் உள்பட 21 மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் அடுத்தடுத்து வாக்குப்பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் முன்னாள் முதல்வரும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி சுயேட்சை வேட்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது:
“பத்து ஆண்டுகளாக நல்லாட்சி புரிந்த பிரதமர் மோடிதான் மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என்று கருத்து கணிப்புகள் வருகின்றன. எனவே மீண்டும் அவரே வெல்வார். ராமநாதபுரம் தொகுதியில் என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உறுதியாக நான் வெற்றி பெறுவேன். 2024 தேர்தல் முடிவில், அதிமுக எங்கள் வசம் வரும். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி எங்கு உள்ளார் என்றே தெரியவில்லை. 2026 தேர்தலிலும் நாங்கள் ஆட்சி அமைப்போம். கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் தேர்தலாக இது அமையும்” என்றார்.
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு எங்களில் ஒருவர் திருந்துவதற்கான வாய்ப்பு ஏற்படும். அவர்கள் போட்ட தப்புக் கணக்கு புரிய வரும்” என்றார்.