தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 19-ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து மொத்தம் 18 பேர் மாநிலங்களவைக்குத் தேர்வாகியுள்ளார்கள். இவர்களில் அன்புமணி ராமதாஸ், எம். சண்முகம், என். சந்திரசேகரன், எம். முஹமது அப்துல்லா, பி. வில்சன், வைகோ ஆகியோரது பதவிக் காலம் ஜூலை 24-ல் நிறைவடைகிறது. இதன்மூலம், தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடத்த வேண்டியிருக்கும்.
இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூன் 19-ல் நடைபெறுகிறது.
வேட்புமனுவை தாக்கல் செய்ய ஜூன் 9 கடைசி நாள். ஜூன் 10-ல் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்பாளர்களைத் திரும்பப் பெற ஜூன் 12 கடைசி நாள். ஜூன் 19-ல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும். ஜூன் 19 அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
திமுக மற்றும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், காலியாகும் 6 இடங்களில் திமுக சார்பில் 4 பேரும் அதிமுக சார்பில் 2 பேரும் மாநிலங்களவைக்குத் தேர்வாக வாய்ப்புள்ளது.
திமுக சார்பில் பி. வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம். மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்படும் என கமல்ஹாசனுடன் 2024 மக்களவைத் தேர்தலில் திமுக ஒப்பந்தம் மேற்கொண்டதாகத் தெரிகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தார். அண்மையில் முதல்வர் மு.க. ஸ்டாலினையும் கமல்ஹாசன் இருமுறை நேரில் சந்தித்தார். எனவே, ஓர் இடம் கமல்ஹாசனுக்கு ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் கொடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதிமுக சார்பில் அன்புமணி ராமதாஸ் அல்லது பாமகவுக்கு ஓர் இடம் ஒதுக்கப்படுமா என்ற கேள்வியும் உள்ளது. இது நிகழும் பட்சத்தில் அதிமுக கூட்டணியில் பாமக இணைவது உறுதியாகும். பாஜக ஓர் இடத்தைக் கேட்குமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.