சூழ்ச்சியால் தோல்வி: மறு வாக்கு எண்ணிக்கைக்கு தேமுதிக மனு

“தேர்தல் முடுவுகள் வருவதற்கு முன்பே முதல்வர் ஸ்டாலின் தாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவித்தார்”.
பிரேமலதா
பிரேமலதா

மக்களவைத் தேர்தலில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை தோற்கடிக்கப்பட்டுள்ளார் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4 அன்று நடைபெற்றது. விருதுநகரில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, “விஜயபிரபாகரன் வீழ்ச்சியடையவில்லை, வீழ்த்தப்பட்டுள்ளார்” என பேசியுள்ளார்.

பிரேமலதா பேசியதாவது:

“நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக - தேமுதிக இணைந்து ஒரு கோடி வாக்குகளுக்கு மேல் பெற்று சரித்திரம் படைத்திருக்கிறோம். இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்து கொள்கிறேன். விருதுநகரில் விஜயபிரபாகரன் கடைசி வரை ஒரு போர் வீரனாக முயற்சி செய்த பிறகு இறுதியாக அவர் தோல்வி அடைந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயபிரபாகரன் தோற்கவில்லை தோற்கடிக்கப்பட்டுள்ளார். விஜயபிரபாகரன் வீழ்ச்சியடையவில்லை, வீழ்த்தப்பட்டுள்ளார். இது தான் உண்மை. தமிழ்நாட்டில் அனைவருக்கும் இது தெரியும்.

இன்னுமும் தனது தந்தையை இழந்த சோகத்தில் இருந்து விஜயபிரபாகரன் மீண்டு வரவில்லை எனக் கூறி இந்த தேர்தலில் பங்கேற்கமாட்டார் என சொன்னார், இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதால் இதில் கலந்து கொண்டார். விஜயபிரபாகரன் மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்துள்ளார். மற்ற வேட்பாளர்களை போல லட்சக் கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தால் இந்த தோல்வியை நாங்கள் ஒப்புக் கொண்டிருப்போம். ஆனால், இது முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட சூழ்ச்சி. அதற்கான ஆதாரங்களும் எங்களிடம் இருக்கிறது. மறு வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கோரி மனு அளித்துள்ளோம்.

ஊடகங்களில் சொல்லப்பட்ட முடிவுகளுக்கும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் சொல்லப்பட்ட முடிவுகளுக்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. இதனை உள்ளே இருக்கும் அதிகாரிகளே சொல்கிறார்கள். நடுவில் 2 மணி நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியரே அங்கு நேரில் வந்து தனது செல்போனுக்கு பலரும் அழைத்து நெருக்கடி தருவதால் நான் எனது செல்போனை அணைத்துவைக்கப் போவதாக கூறியுள்ளார்.

உண்மையாக நடந்தால் தான் அது தேர்தல். தேர்தல் முடுவுகள் வருவதற்கு முன்பே முதல்வர் ஸ்டாலின் தாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக கூறுகிறார். முதல்வர் இதற்கு விளக்கம் அளிக்கவேண்டும். இதுகுறித்து வாக்கு எண்ணும் மையத்தில் கேட்கப்பட்டதற்கு அனைவரும் சேர்ந்து மிரட்டும் தோணியில் பதிலளித்துள்ளனர்” என்றார்.

இந்நிலையில் தேர்தல் முடுவுகளில் சந்தேகம் இருந்தால் உயர் நீதிமன்றத்தை தான் நாட முடியும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in