
வரும் பிப்ரவரி 5-ல் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
ஈரோடு மாநகரத்தில் உள்ள இரு சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஈரோடு கிழக்கு தொகுதியும் ஒன்றாகும். கடந்த 2008-ல் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பில், ஈரோடு சட்டப்பேரவைத் தொகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என இரு தொகுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டன.
நேற்று (ஜன.6) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 1,09,636 ஆண் வாக்காளர்கள், 1,16, 760 பெண் வாக்காளர்கள், 37 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,26, 433 வாக்காளர்கள் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 2011-ல் நடைபெற்ற முதல் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் வி.சி. சந்திரகுமார். 2016-ல் அதிமுகவின் கே.எஸ்.தென்னரசுவும், அதைத் தொடர்ந்து 2021-ல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவும் வெற்றி பெற்றனர்.
திருமகன் ஈவெராவின் மறைவிற்குப் பிறகு, 2023 பிப்ரவரி 27-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் அவரது தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 14-ல் உடல்நலக்குறைவால் காலமானார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
அவரது மறைவால் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி 5-ல் வாக்குப்பதிவும், பிப்ரவரி 8-ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று (ஜன.7) அறிவித்துள்ளார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஈரோடு மாநகராட்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. ஈரோடு மாநகராட்சி மேயர், துணை மேயர் அறைகள் சீலிடப்பட்டன. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும், பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.