
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான மனு குறித்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். வழக்கு தொடர்பான மனுவில், அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பிரச்னையால் அக்கட்சியின் பல்வேறு சட்டவிதிகள் மாற்றப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவை முடியும் வரை அக்கட்சி சின்னமான இரட்டை இலையை முடக்கி வைக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்ததாகவும், ஆனால் புகார் மனு மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தன் புகார் மனு மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும், அதுவரை அதிமுக சின்னமான இரட்டை இலையை முடக்கி வைக்க உத்தரவிட வேண்டும் எனவும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார் சூரியமூர்த்தி.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், சி. குமரப்பன் ஆகியோரைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வுக்கு முன்பு இன்று (நவ.25) நடைபெற்றது. அப்போது, சூரியமூர்த்தியின் புகார் மனு மீது இந்திய தேர்தல் ஆணையம் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என தேர்தல் ஆணைய வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், தேவைப்பட்டால் நள்ளிரவு நேரத்தில் கூட உத்தரவுகளை பிறப்பிக்கும் தேர்தல் ஆணையம், புகார் மனு அளிக்கப்பட்டு இத்தனை நாட்கள் கடந்தும் இந்த விவகாரத்தில் ஏன் முடிவு எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினர். நீதிபதிகளுக்கு பதிலளித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர், இரட்டை இலை தொடர்பான சூரியமூர்த்தி மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.