
தமிழக வெற்றிக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோர முடியாது எனத் தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று நடந்த தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் மனுதாக்கல் செய்தார். அதில், விஜயின் பரப்புரை கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்றது மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளுக்கு முரணானது என்றும், அதனால் சட்ட விதிகளை மிறும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த வழக்கு முடியும்வரை எந்த அரசியல் கட்சிக்கும் ரோடு ஷோ, கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்று காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக வெற்றிக் கழகம் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்க முடியாது என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும், காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவில் எழுப்பப்பட்டுள்ள சில கோரிக்கைகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குடன் தொடர்புடையதாகவும், சில கோரிக்கைகள் வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக உள்ளதாலும், உச்ச நீதின்றத்தின் உத்தரவின் அடிப்படையில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட உள்ள சிறப்பு அமர்வு முன்பு இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர். மேலும், அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கூடிய அனைத்து வழக்குகளும் ஒரே அமர்வில் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.