தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி குறித்து பகுஜன் சமாஜ் கட்சி அளித்த புகாருக்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், தவெக கொடி விவகாரத்தில் தலையிட மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 22-ல் தவெக தலைவர் விஜய், கட்சிக் கொடியை சென்னை நீலாங்கரையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அறிமுகப்படுத்தினார். சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருந்த கட்சிக் கொடியின் நடுவே வாகை மலரும், அதற்கு இரு பக்கம் போர் யானைகளும் இடம்பெற்றிருந்தன.
இதைத் தொடர்ந்து தவெக கொடியில் யானை இடம்பெற்றதற்கு தமிழக பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. ஆங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் யானை சின்னத்தைப் பயன்படுத்தி வருகிறது.
அஸ்ஸாம் மற்றும் சிக்கிம் தவிர வேறு எந்த மாநிலத்திலும், எந்தவொரு அரசியல் கட்சியும் யானைச் சின்னத்தைப் பயன்படுத்தக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவு அமலில் உள்ளது. இந்தத் தகவலை மேற்கோள் காட்டிய பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆனந்தன், தவெக கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்தத் தடை கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்படும் என அறிவித்தார்.
இதை அடுத்து தவெக கொடியில் யானையைப் பயன்படுத்த இந்தியத் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தது பகுஜன் சமாஜ் கட்சி. இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி அளித்த மனுவுக்குப் பதிலளித்து, அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
அந்தக் கடிதத்தில், `அரசியல் கட்சிகளின் கொடிகள் மற்றும் அதில் இடம்பெறும் சின்னங்களுக்கு நாங்கள் ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்குவது இல்லை, எனவே தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி விவகாரத்தில் தலையிட முடியாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.