

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்தது.
தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் நாளை (நவ. 4) முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்குகிறது. நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, டிசம்பர் 9-ல் முதற்கட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடபட்டு, ஜனவரி 31 வரை திருத்தங்கள் பெறப்பட்டு, பிப்ரவரி 7 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு எதிராக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை தியாகராய நகர், தாம்பரம் தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலிலில் இருந்து இறந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், தகுதியற்றவர்கள் மற்றும் இரட்டை பதிவு செய்யப்பட்ட பெயர்களைப் நீக்கக் கோரிய விண்ணப்பத்தைப் பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நாளை (நவ. 4) முதல் தொடங்க உள்ளன. இப்பணிகள் மூலம் முழுமையான வாக்காளர் பட்டியலை மாற்றியமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு வாக்காளருக்கும் படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்த படிவங்களை சரிபார்த்து டிசம்பர் மாதம் 9-ம் தேதி சிறப்பு தீவிர திருத்த பணிகள் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போது வரைவு பட்டியலுக்கு ஆட்சேபம் தெரிவிக்கலாம். அது அதை முழுமையாக பரிசீலித்த பிறகே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தமிழ்நாட்டில் 2005-க்குப் பிறகு சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. இப்பணிகள் எதிர்ப்பார்த்ததைவிட சிறப்பாக மேற்கொள்ளப்படும்” என உறுதியளித்தார்.
இதுபோல கரூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்தவர்களின் பெயர்களை நீக்கக் கோரி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். இந்த வாதங்களை பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நவம்பர் 13 அன்று விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.
The Election Commission assured the Madras High Court that there is no need to fear the Special Intensive Revision works of the voter list.