அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி பாதிப்பு! | Namakkal | USA | Tariffs

தூத்துக்குடி துறைமுகம் வழியாக சுமார் 1 கோடி முட்டைகள் கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
முட்டை - கோப்புப்படம்
முட்டை - கோப்புப்படம்ANI
1 min read

இந்திய பொருட்களுக்கு அமெரிக்காவில் 25% வரி விதிக்கப்படவுள்ள விவகாரத்தின் எதிரொலியாக நாமக்கல்லில் இருந்து அந்நாட்டிற்கு மேற்கொள்ளப்படும் முட்டை ஏற்றுமதி தடைபட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முட்டை தலைநகராக நாமக்கல் விளங்குகிறது. நாள் ஒன்றுக்கு இங்கு உற்பத்தி செய்யப்படும் சுமார் 6 முதல் 7 கோடி முட்டைகள் தமிழகம மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்தது. இதன் அடிப்படையில் நாமக்கல்லில் கொள்முதல் செய்யப்பட்டு, தூத்துக்குடி துறைமுகம் வழியாக சுமார் 1 கோடி முட்டைகள் கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து படிப்படியாக அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி அதிகரிக்கக்கூடும் என்று நாமக்கல் கோழிப் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் முட்டை ஏற்றுமதியாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.

இத்தகைய சூழலில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அபராதங்களுடன் 25% வரி விதிக்கப்படும் என்று கடந்த ஜூலை மாத இறுதியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த வரி வரிப்பு நடைமுறை நாளை (ஆகஸ்ட் 7) முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டது.

இதனால் நாமக்கல்லில் இருந்து அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்பட்ட முட்டை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. வரி விதிப்பு அமலாகவுள்ளதால், இந்திய முட்டைகளை கொள்முதல் செய்ய அமெரிக்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை என்பதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

எனினும், நாமக்கலில் முட்டைகள் தேக்கமடையாத வகையில் நாட்டின் பிற பகுதிகளுக்கு அவற்றை விற்பனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முட்டை ஏற்றுமதியாளர் சங்கம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in