அதிமுகவை சீண்ட வேண்டாம்: இபிஎஸ் எச்சரிக்கை

"அதிமுகவை யார் அழிக்க நினைத்தாலும், உடைக்க நினைத்தாலும் காற்றோடு கரைந்து சென்றுவிடுவார்கள். இதுதான் வரலாறு."
அதிமுகவை சீண்ட வேண்டாம்: இபிஎஸ் எச்சரிக்கை

அதிமுகவை சீண்டினால், எதிர்வினை எப்படி இருக்கும் எனத் தொண்டர்கள் பாடம் கற்பிப்பார்கள் என எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். 2024 தேர்தலுக்குப் பிறகு அதிமுக இருக்காது என்ற அண்ணாமலை, தேனியில் டிடிவி தினகரனை ஆதரித்து இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தேர்தலுக்குப் பிறகு டிடிவி தினகரன் வசம் வரும் என்று அண்ணாமலை பேசினார்.

இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரியலூரில் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இதில் அவர் பேசியதாவது:

2024-க்கு பிறகு அதிமுக இருக்காது என்று சிலர் பேசுகிறார்கள். அதிமுக இங்குதான் இருக்கும். ஜூன் 4-க்கு பிறகு யார் காணாமல் போவார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். அதிமுக பொன்விழா கண்ட கட்சி. 50 ஆண்டு காலத்தை நிறைவு செய்த கட்சி இது.

மதுரையில் அதிமுகவின் மாநில மாநாட்டை நடத்தினோம். அந்த மாநாடு இந்தியாவே திரும்பிப் பார்க்கும் மாநாடாக அமைந்தது. அதுகூட சில பேருக்குப் புரியாமல், வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகிவிட்டதாகத் தெரிகிறது. அதனால்தான் இப்படியெல்லாம் மாறிமாறி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதிமுகவைத் தோற்றுவித்தவர் எம்ஜிஆர். அதைக் கட்டிக்காத்தவர் ஜெயலலிதா. இரு பெரும் தலைவர்களும் தெய்வமாக விளங்கிக்கொண்டிருக்கிறார்கள். இது தெய்வத்தின் அருளாசியோடு இருக்கிற கட்சி. இது தெய்வ சக்தியுள்ள கட்சி. கட்சியை யார் அழிக்க நினைத்தாலும், உடைக்க நினைத்தாலும் காற்றோடு கரைந்து சென்றுவிடுவார்கள். இதுதான் வரலாறு.

அதிமுகவிடம் பூச்சாண்டி காட்டுகிற வேலையை நிறுத்துங்கள். அதிமுக உழைப்பை நம்புகிற கட்சி. அது யாருக்கும், எதற்கும் அஞ்சாத கட்சித் தொண்டர்கள் இருந்த கட்சி.

30 ஆண்டுகாலம் ஆட்சி செய்த கட்சியைப் பார்த்து மிரட்டிப் பார்க்கிறீர்கள். இந்த வேலையெல்லாம் இங்கு எடுபடாது. 2.6 கோடி தொண்டர்கள் இருந்த கட்சி. இது தொண்டர்களால் ஆளப்படுகிற கட்சி. ஆக, அதிமுகவை சீண்டிப் பார்க்க வேண்டாம். சீண்டிப் பார்த்தால், அதன் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதைத் தொண்டர்கள் பாடம் கற்பிப்பார்கள்" என்றார் எடப்பாடி பழனிசாமி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in