
ஆதவ் அர்ஜுனா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக விஜய் தங்களை அழைத்துப் பேசினாரா என்ற கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது:
"திமுக இன்று மதுரையில் பொதுக்குழுவைக் கூட்டி பல தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். அதிமுக குறித்து ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். துரோகம் அதிமுக என்று ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார். திமுக தான் இந்த நாட்டுக்குத் துரோகம் இழைத்து வருகிறது.
அதிமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதா மற்றும் நான் முதல்வராக இருந்தபோது சிறப்பான திட்டங்களை நாட்டு மக்களுக்கு வழங்கினோம். சட்டம் - ஒழுங்கு சிறப்பாகப் பேணிக் காக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மக்கள் விரோத ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. தினந்தோறும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. இந்தச் செய்தி தான் எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது. அப்படி ஒரு மோசமான ஆட்சி தமிழ்நாட்டில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் மாடல் ஆட்சி தான் துரோக ஆட்சி.
ஒரு மோசமான ஆட்சி என்பதற்கு கால்வாயை மூடியதே சான்று. முதல்வருக்கே பிடிக்கவில்லை என்பதால் தான் திரை போட்டு சாக்கடை கழிவு நீர் வெளியில் செல்லும் கால்வாய் தூர்வாரப்படாமல் மிக மோசமாக துர்நாற்றம் அடித்துக்கொண்டிருக்கும்போது அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் திரை போட்டு மறைத்திருக்கிறார்கள். அப்படியொரு அவல ஆட்சி தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது" என்றார் எடப்பாடி பழனிசாமி.
ஆதவ் அர்ஜுனா பேசியது தொடர்பாக விஜய் தங்களை அழைத்துப் பேசியதாகத் தகவல் வெளியானது குறித்த கேள்விக்கு, அப்படியெல்லாம் இல்லை என்று பதிலளித்தார். ஆதவ் அர்ஜுனா பேசியது பற்றிய கேள்விக்கு அவரே எக்ஸ் தளப் பக்கத்தில் வருத்தம் தெரிவித்து பதிவிட்டுவிட்டார், அதோடு முடிந்துவிட்டது என்று கூறினார்.
அதிமுகவைப் பொறுத்தவரை தேமுதிகவுடன் கூட்டணி உள்ளது என்றபோதிலும், தேமுதிக ஜனவரியில் தான் கூட்டணி பற்றி அறிவிப்போம் என்கிறார்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "எங்களிடைய சுமூகமான உறவு இருக்கிறது. எப்படியாவது எதையாவது பேசி அதை உடைக்கலாம் என்று நினைக்காதீர்கள். அது ஒருபோதும் நடக்காது" என்றார்.
முன்பு, மதுரையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 27-வது தீர்மானமாக, "வஞ்சக பா.ஜ.க.வையும் துரோக அ.தி.மு.க.வையும் விரட்டியடித்து 2026-இல் கழக ஆட்சி தொடர களப்பணியைத் தொடங்குவோம்!" என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, எடப்பாடி பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை ஒருமையில் பேசிய காணொளி சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. இதற்கு ஆதவ் அர்ஜுனா வருத்தம் தெரிவிப்பதாக எக்ஸ் தளப் பக்கத்தில் இன்று பதிவிட்டார்.