
Edappadi Palaniswami On Coalition Government: தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்றும், ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளி அல்ல என்றும் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு `மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!’ என்ற பெயரில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பொதுமக்களை சந்தித்து நடத்தி பிரச்சார கூட்டங்களை எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார்.
அந்த வகையில் நேற்று (ஜூலை 19) திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
`சட்டமன்றத்தில் நாங்களும் தம்பிகளும் அமர்ந்திருந்தோம். திடீரென ஸ்டாலின் எழுந்து பேசினார். என்னைப் பார்த்து, நீங்கள் என்ன பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டீர்கள் நீங்கள்தான் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று கூறினீர்கள், 2031 வரைக்கும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கூறினீர்கள், திடீரென்று வைத்துவிட்டீர்களே என்றார்.
எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது, முதல்வர் என்ன இப்படி கேட்கிறார் என்று. நான் எழுந்து, இது எங்கள் கட்சி இது அண்ணா திமுக நாங்கள் யாருடன் வேண்டுமென்றாலும் கூட்டணி வைப்போம் அது எங்கள் விருப்பம் நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள் நீங்கள் ஏன் கதறுகிறீர்கள் என்று சொன்னதும் அமர்ந்துவிட்டார்.
அதிமுக பாஜக கூட்டணி அமைந்ததும் பயம் ஏற்பட்டுவிட்டது. இன்னொன்றையும் அவர் கூறினார், அதிமுக பாஜக கூட்டணியில் ஆட்சியில் பங்கு கொடுப்பார்கள் என்று. நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல, அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைப்போம்.
எங்களுக்கு கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும், வேண்டாம் என்றால் வேண்டாம். எதைப் பற்றியும் கவலைப்படவில்லை, உங்களைப் போல வாரிசுக்காக ஆட்சிக்கு வருவதற்காக நாங்கள் துடிக்கவில்லை, மக்களின் விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றுவோம். எங்களுக்கு மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றவேண்டும்.
அதற்கு ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும்; அதுதான் எங்கள் நிலைப்பாடு. அந்த வகையில் ஊழல் திமுக அரசாங்கத்தை அகற்ற வேண்டும் என்று பாஜக கருதுகிறது. அப்படித்தான் பாஜக எங்களுடன் இணைந்திருக்கிறது. மேலும் சில கட்சிகள் வர இருக்கின்றன, சரியான நேரத்தில் (அவை) வரும்’ என்றார்.