விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்யாததால், அவை அனைத்தும் மழையில் நனைந்து வீணாகியிருப்பதால் விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளி என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக அதிகளவில் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதுபற்றி கூறியதாவது:
"அரசு நேரடிக் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்வதாகக் கூறினார்கள். ஆனால் இங்கு வந்து லோடு மேனிடம் கேட்டால், நேரடிக் கொள்முதல் நிலையங்களில் நாளொன்று 900 மூட்டைகளைத் தான் எடை போடுகிறோம் என்கிறார்கள். இதன்மூலம், அமைச்சர் சட்டப்பேரவையில் தவறான தகவலைச் சொல்லியிருக்கிறார் என்பது தெரிகிறது.
அமைச்சர் சொல்வதுபோல தினந்தோறும் 2,000 மூட்டைகளை நேரடிக் கொள்முதல் நிலையங்களில் எடை போட்டிருந்தால், எடைபோட்ட மூட்டைகள் கிடங்கிலிருந்து வெளியே சென்றிருக்கும். எடைபோட்ட மூட்டைகளை இங்கே அடுக்கி வைத்திருக்கிறார்கள். லாரியை அனுப்பாததால், இந்த மூட்டைகளையெல்லாம் எடுத்துச் செல்ல முடியவில்லை. மூட்டைகள் அனைத்தும் கிடங்கிலிருந்து வெளியேறாததால், விவசாயிகள் புதிதாகக் கொண்டு வரும் நெல் மூட்டைகளை எடைபோட்டு வைக்க இடமில்லை.
ஏறத்தாழ 15 நாள்களாக காட்டூர் பகுதி மக்கள் தங்கள் நிலங்களில் விளைந்த நெல்மணிகளை மூட்டைகளில் கட்டி வைத்துள்ளார்கள். அந்த மூட்டைகளில் பல மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துள்ளன. சாலையில் நெல்மணிகளைக் குவித்து வைத்திருப்பதாக விவசாயிகள் நேரடியாகச் சொன்னார்கள். விவசாயிகள் கண்ணீரோடு தங்களுடைய வேதனையைத் தெரிவிக்கிறார்கள். விவசாயிகளுக்கு இந்தத் தீபாவளி கண்ணீர் தீபாவளியாக மாறியிருக்கிறது" என்றார் எடப்பாடி பழனிசாமி.
Edappadi Palaniswami | Farmers | AIADMK | Delta |