

கட்சிக்குள்ளேயே உள்குத்து வேலைகள் செய்த துரோகிகளால்தான் 2021-ல் அதிமுக ஆட்சிக்கு வரமுடியவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 118-வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு ஏராளமான அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அப்போது அதிமுகவைச் சேர்ந்த கே. செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் ஒன்றாக வாகனத்தில் வருகை தந்து, மரியாதை செலுத்தினர். அதன்பின் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் எதிரி, அதிமுக எதிரி கிடையாது என்று பேசினர்.
இதையடுத்து, மதுரை அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் நெல்கொள்முதல் விவகாரத்தில் திமுக அரசைக் கடுமையாகச் சாடினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
”ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், கே. செங்கோட்டையன் மூவரும் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்கள் என்று கேள்விப்பட்டேன். ஆனால் நான் அதைப் பார்க்கவில்லை. அது ஏற்கெனவே போட்ட திட்டம்தான். அதிமுகவில் இருந்தபோதே குழிபறித்த காரணத்தால்தான் நாங்கள் வெற்றிவாய்ப்பை இழந்துவிட்டோம். இப்படிப்பட்ட துரோகிகள் அதிமுகவில் இருந்த காரணத்தால்தான் எங்களால் 2021-ல் ஆட்சிக்கு வரமுடியவில்லை. இரு நாள்களுக்கு முன் ஓ. பன்னீர்செல்வம் என்ன சொன்னார் என்பது நினைவிருக்கிறதா? திமுக ஆட்சிக்கு வரும் என்றார். இவரா அதிமுகவைச் சேர்ந்தவர்? உண்மையான அதிமுகவைச் சேர்ந்தவரின் மனதில் இருந்து இத்தகைய வார்த்தைகள் வந்திருக்காது. இவர்களெல்லாம் திமுகவின் பி டீமாக இருந்து செயல்படுகிறார்கள்.
செங்கோட்டையனைக் கட்சியை விட்டு நீக்குவதில் எந்தத் தயக்கமும் இல்லை. இனிமேல்தான் தெரியும். ஏற்கெனவே அவருக்குக் கொடுக்கப்பட்ட பதவிகளை நீக்கியிருக்கிறோம். அதிமுகவைப் பொறுத்தவரை யார் துரோகம் செய்தாலும் சரி, தலைமையின் கருத்தை முழுமையாகக் கடைபிடிக்காவிட்டால் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதிமுகவை எத்தனை துரோகிகள் வந்தாலும் வீழ்த்த முடியாது. எங்கள் பக்கம் இருப்பவர்கள்தான் உண்மையான அதிமுக. எம்ஜிஆர் காலத்தில் இருந்து அணி பிறழாமல் இருப்பவர்கள்தான் எங்கள் பக்கம் அமர்ந்திருக்கிறார்கள்.
ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், கே. செங்கோட்டையன் மூவரும் ஒன்றிணைந்ததைப் பற்றி பேசுவதால் கால நேரம்தான் வீணாகும். அதிமுக பலவீனமாக இருப்பதாகத் திட்டமிட்டுச் செய்திகள் பரப்பப்படுகின்றன. செங்கோட்டையன் போன்றவர்கள் இருந்ததால்தான் எங்களால் அந்தியூர் போன்ற தொகுதிகளில் வெல்ல முடியாமல் போனது. அதெல்லாம் அதிமுகவின் கோட்டையாக இருக்கும் தொகுதிகள். ஆனால் இன்று எல்லாவற்றையும் தெளிவாக்கிவிட்டார்கள். பயிர் செழிக்க வேண்டுமென்றால் அதில் இருக்கும் களைகளை எடுக்க வேண்டும். களைகள் எடுக்கப்பட்டன. பயிர் செழித்து வளரும். நல்ல விளைச்சல் கொடுக்கும். அதிமுக அடுத்தமுறை ஆட்சி அமைக்கும்” என்றார்.
Edappadi Palaniswami slammed OPS, TTV Dhinakaran, and Sengottaiyan for attending the Thevar event together, stating because of such traitors that the AIADMK could not come to power in 2021.