ஒரே காரில் ஓபிஎஸ், செங்கோட்டையன்: எடப்பாடி பழனிசாமி கொடுத்த பதில்! | Edappadi Palaniswami | AIADMK |

எடப்பாடி பழனிசாமியுடன் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோரும் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.
Edappadi Palaniswami pays tribute to Pasumpon Muthuramalinga Thevar
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள்.படம்: https://x.com/EPSTamilNadu
2 min read

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது பிறந்தநாள் மற்றும் 63-வது குருபூஜையை முன்னிட்டு அவருடைய நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்து முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

"அதிமுக சார்பில் நானும் என்னுடைய மூத்த தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினோம்.

தேவர் திருமகனார் பிறந்தநாள், ஜெயந்தி விழா அரசுத் தரப்பில் கொண்டாடப்படும் என்று எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக இருந்த காலகட்டத்தில் அறிவித்தார். தேவர் ஐயாவுக்குப் புகழ் சேர்க்கும் விதமாக சட்டப்பேரவை வளாகத்தில் தேவர் ஐயாவின் முழு உருவப் படத்தைத் திறந்துவைத்து அவருக்கு புகழ் சேர்த்தார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் சுமார் 13.5 கிலோ தங்கத்தில் தேவர் ஐயா நினைவிடத்தில் இருக்கிற தேவர் ஐயா சிலைக்கு தங்கக் கவசம் சாத்தினார். தேவர் ஐயாவுக்குப் புகழ் சேர்க்கும் விதமாக நந்தனத்தில் முழு உருவச் சிலையை நிறுவி தேவர் ஐயாவுக்குப் பெருமை சேர்த்தார்.

தேவர் ஐயா அவர்கள் தனது வாழ்நாளில் மக்களுக்காகப் பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து சுமார் 4 ஆயிரம் நாள்கள் சிறையில் இருந்தவர். தேவர் ஐயா அவர்கள் அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தேர்தல் என இரண்டிலும் ஒரே நேரத்திலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்று மக்கள் செல்வாக்குமிக்க தலைவர் என்று அந்தக் காலகட்டத்தில் நிறுவிக் காட்டியவர்.

அவர் வாழ்ந்த காலகட்டத்தில் தனக்குச் சொந்தமான பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஏழைகளுக்கும், பட்டியலின மக்களுக்கும் பிரித்துக் கொடுத்து ஏழைகளை வாழ வைத்த குடை வள்ளலாகத் திகழ்ந்தவர். இப்படி பேருக்கும் புகழுக்கும் உரியவர் தேவர் ஐயா அவர்கள்.

அவருக்கு மேலும் புகழ் சேர்க்கும் விதமாக அதிமுக சார்பில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேணடும் என மத்திய உள்துறை அமைச்சரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். அவர் தேசியத் தலைவராக இருந்தவர். மக்களுக்காகப் பாடுபட்டவர். நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து மக்களுக்குத் தொண்டாற்றியவர். அப்படி உயர்ந்த உள்ளம் கொண்ட தேசபக்தி மிக்க தேவர் ஐயா அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என அதிமுக சார்பில் நேரடியாக மத்திய அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளோம்" என்றார் எடப்பாடி பழனிசாமி.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்துள்ளார் என்ற கேள்விக்கு, அதை வழிமொழிவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்பு தெரிவித்தார். இதுபற்றிய கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, "இது உயர்ந்த இடம். தேவர் ஐயா என்பவர் அனைத்து மதத்தினருக்கும், சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் பொதுவானவர். தேசப் பக்தி மிக்கவர், தேசத்துக்காகவும் மக்களுக்காகவும் பாடுபடட்வர். அப்படி இருக்கும் அவருக்கு, அனைவருக்கும் புகழ் சேர்ப்பது பெருமைக்குரியது" என்றார் எடப்பாடி பழனிசாமி.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கே.ஏ. செங்கோட்டையன் ஒரே காரில் வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். இதற்குப் பதிலளிக்கையில், "எனக்குத் தெரியவில்லை. வந்தால் தான் தெரியும். வந்தால் நான் பதில் சொல்கிறேன்" என்றார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவில் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டுள்ள கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு ஒரே காரில் வந்துகொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்புடைய புகைப்படங்கள் வெளியாகின. மேலும், இவர்கள் இருவரும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் இணைந்து மூவரும் ஒன்றாக வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மூலம் அடுத்தபடியாக சசிகலாவைச் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Summary

Edappadi Palaniswami and former ministers paid homage to Pasumpon Muthuramalinga Thevar.

KA Sengottaiyan | Sengottaiyan | AIADMK | ADMK | Pasumpon Muthuramalinga Thevar | O Panneerselvam | TTV Dhinakaran | Edappadi Palaniswami |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in