முகத்தைத் துடைத்ததை வைத்துத் தரம் தாழ்ந்த அரசியல் செய்யலாமா?: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami |

அதிமுக உட்கட்சி விவகாரங்களில் அமித் ஷா தலையிட மாட்டார் என்றும் திட்டவட்டம்...
முகத்தைத் துடைத்ததை வைத்துத் தரம் தாழ்ந்த அரசியல் செய்யலாமா?: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami |
2 min read

உள்துறை அமைச்சர் அமித் ஷாவைப் பகிரங்கமாகவே சந்தித்தேன். முகத்தைத் துடைத்ததை வைத்துத் தரம் தாழ்ந்த அரசியல் செய்யலாமா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது -

“கடந்த இரண்டு நாட்களாக நான் டெல்லி சென்ற பிறகு, பல்வேறு விமர்சனங்கள் ஊடகங்களிலும் பத்திரிக்கைகளிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் நான் கொஞ்சம் விரிவாகவும் தெளிவாகவும் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எப்படி நடந்து கொண்டார்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆளுங்கட்சியாக வந்த பிறகு, யாரை விமர்சித்தார்களோ, அவர்களுக்கே ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்ற காட்சியை ஊடகங்களும் பத்திரிக்கைகளும் மக்களுக்கு காண்பித்தன.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரதமர் சென்னை வந்தால் கறுப்புக் கொடி காட்டினார்கள். கறுப்பு பலூனைப் பறக்க விட்டார்கள். இப்போது அவரைத் தலைமையாகக் கொண்டு செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

நான் செப்டம்பர் 16-ல் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க தில்லி சென்றேன். என்னுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாநில உறுப்பினர்கள் உட்பட பல இருந்தனர். இரவு நேரம் ஆகிவிட்டதால் மறுநாள் காலை குடியரசுத் துணைத் தலைவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம்.

தில்லியில் நான் தமிழ்நாடு இல்லத்திலிருந்து, அரசாங்கத்துக்குச் சொந்தமான காரில் தான் குடியரசுத் துணைத் தலைவரைச் சந்தித்தேன். பிறகு, உள்துறை அமைச்சரை அவரது இல்லத்தில் சந்திக்கும்போதும், அரசாங்கக் காரில் தான் சென்று அவரைச் சந்தித்தேன். பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, நான் 20 நிமிடங்கள் அவருடன் பேசிவிட்டு வெளியேறினேன். வெளியே வரும்போது முகத்தைத் துடைத்தபோது, ஒரு வீடியோ எடுத்து, சில ஊடகங்கள் திட்டமிட்டு வெளியிட்டது எந்த விதத்திலும் சரியாக இருக்காது. இது உண்மையிலேயே வருத்தத்துக்குரியது. ஊடகங்களும் பத்திரிக்கைகளும் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஒரு கட்சியின் பொதுச் செயலாளரை திட்டமிட்டு அவதூறாகச் செய்தி வெளியிடுவது சரியல்ல. இன்றைய பத்திரிக்கைகள் மக்களுக்கு உண்மையான செய்திகளை கொண்டு சேர்க்க வேண்டும். இனிமேல், நான் கழிவறைக்குச் சென்றாலும், அதை ஊடகங்களில் சொல்லிவிட்டுத் தான் செல்ல வேண்டும் என்ற நிலைக்கு அரசியல் போய்விட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இதைப் பற்றி கரூர் கூட்டத்தில் பேசுகிறார். நான் முகத்தை மறைத்து வெளியே சென்றதாக பேசுவது எந்த விதத்தில் சரியாக இருக்கும்?

ஒரு முதலமைச்சர் எதைப் பேச வேண்டும் என்று தெரியாமல் பேசுவதால் தான் அவரை பொம்மை முதலமைச்சர் என்று சொல்கிறேன். எங்கள் மீது குற்றச்சாட்டு சொல்வதற்கு அவரிடம் எந்த ஆதாரமும் இல்லை. நாங்கள் அப்படி நடக்கவும் இல்லை. எங்கள் ஆட்சியில் சிறப்பான ஆட்சி கொடுத்தோம். அதில் எந்தக் குறைகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், இப்படி சிறுபிள்ளைத்தனமாக பேசுவது ஒரு முதலமைச்சருக்கு அழகல்ல. இதே ஸ்டாலின், பெரும்பான்மையை நிரூபிக்கும்போது சட்டை கிழித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். மனம் பாதிக்கப்பட்டவர்கள் தான் சட்டை கிழிப்பார்கள். அப்படிப்பட்டவர் என்னைப் பற்றி பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை.

ஐடிசி ஹோட்டலில் அதிமுக - பாஜக சந்திப்பிலேயே அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நான் தலையிடவில்லை என்று உள்துறை அமைச்சர் தெளிவாகக் கூறிவிட்டார். இது பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் ஆதாரத்துடன் வந்திருக்கிறது. இதற்குப் பிறகு மீண்டும் அவர் அழைத்துப் பேசவில்லை. நானும் தெளிவுபடுத்திவிட்டேன், எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இனி அரைத்த மாவையே அரைக்க வேண்டாம்.”

இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in