
பாஜகவுடன் கூட்டணி மட்டுமே அமைத்துள்ளோம், கூட்டணி ஆட்சி கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர அதிமுக சார்பில் சட்டப்பேரவை சபாநாயகரிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் நோட்டீஸை சபாநாயகர் நிராகரிக்கவே, அதைக் கண்டித்து அதிமுகவினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,
`திமுகவை வீழ்த்தவேண்டும், ஆட்சியில் இருந்து அகற்றவேண்டும் என்ற கருத்துடைய கட்சிகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று நாங்கள் முயற்சி செய்தோம். அந்த முயற்சியில் முதல்கட்டமாக பாஜக எங்களுடன் இணைந்துள்ளது.
(தேர்தலுக்கு) இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், எங்கள் கூட்டணியில் பல கட்சிகள் விரைவில் சேரும். இது எங்களுடைய கட்சி. நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைப்போம். எதிர்க்கட்சிகளுக்கு ஏன் எரிச்சலாக இருக்கிறது? எதற்காக பயப்படவேண்டும்?
எங்களுடைய கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். கூட்டணி அமைப்பது எங்கள் விருப்பம், அதை பற்றிக் கூற உங்களுக்கு அருகதை கிடையாது. மக்கள் அதை முடிவு செய்யட்டும்.
கூட்டணி அரசு அமையும் என்று யாரும் கூறவில்லை. அதிமுக பாஜக கூட்டணியின் ஆட்சி அமையும். தில்லிக்குப் பிரதமர் நரேந்திர மோடி என்றும், தமிழகத்திற்கு எடப்பாடி பழனிசாமி என்றுதான் (அமித்ஷா) கூறினார்’ என்றார்.