
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்கிற கேள்விக்கு, `எங்களின் ஒரே எதிரி திமுக மட்டுமே. சிதறும் வாக்குகளை ஒருங்கிணைத்து திமுக ஆட்சியை வீழ்த்துவதுதான் அதிமுகவின் கடமை’ என்று பதிலளித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இன்று (மார்ச் 4) செய்தியாளர்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,
`திமுகவை வீழ்த்துவதற்கு அதிமுக தயாராக இருக்கிறது. எங்களின் ஒரே எதிரி திமுக மட்டுமே. வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி கிடையாது. திமுகவை வீழ்த்தவேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். தேர்தலில் சிதறும் வாக்குகளை ஒருங்கிணைத்து மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவதுதான் அதிமுகவின் தலையாய கடமை.
அதுதான் 2026 தேர்தலில் நடக்கும். பாஜக குறித்து 6 மாதங்கள் கழித்து என்னிடம் கேளுங்கள். அனைத்து கேள்விகளுமே யூகத்தின் அடிப்படையில் கேட்கப்படுகிறது. நாங்கள் ஏற்கனவே கூறிவிட்டோம். யாரெல்லாம் இங்கு இருக்கிறார்கள் என்பது 6 மாதங்களுக்குப் பிறகு தெரிவிக்கப்படும்.
இதை மறைமுகமாக மேற்கொள்ள முடியாது, வெட்ட வெளிச்சமாக அறிவிக்கப்படும். தற்போது இதுதான் நிலை. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது’ என்றார்.
இதைத் தொடர்ந்து, தேமுதிகவுக்கு மாநிலங்களவையில் இடம் ஒதுக்குவது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பழனிசாமி,
`கூட்டணி குறித்து தேவையில்லாத கேள்விகளை எழுப்பவேண்டாம். அவ்வாறு கூறியது யார்? அப்படி நாங்கள் ஏதாவது கூறினோமா? யார் யாரோ பேசுவது குறித்தெல்லாம் எங்களிடம் கேட்கவேண்டாம். இது தொடர்பாக நாங்கள் ஏதாவது வெளிப்படுத்தினோமா?’ என்றார்.