தமிழ்நாடு பெண்களுக்குப் பாதுகாப்பானதா?: எடப்பாடி பழனிசாமி கேள்வி | Edappadi Palaniswami |

தமிழ்நாட்டின் பெண்கள் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டாமா?....
எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
1 min read

கோவையில் பெண் ஒருவர் காரில் கடத்திச் செல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியான நிலையில் தமிழ்நாடு பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறதா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவையை அடுத்த இருகூரில் வெள்ளை நிறக் காரில் பெண் ஒருவர் சத்தமிட்டுச் சென்றதாகக் காவல்துறையினருக்கு ஒருவர் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில் பெண் மாயமானது குறித்து இதுவரை எந்தவித புகாரும் வரவில்லை என்று கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறதா என்று சில சம்பவங்களைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:-

“கோவையில் சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் காரில் கடத்தப்படுவது போன்ற சிசிடிவி காட்சிகள் செய்திகளில் வந்துள்ளன. மேலும், சென்னை கண்ணகி நகரில் 6-ம் வகுப்பு மாணவி ஒருவர் மாயமாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளை பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக சமரசம் செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்தி வந்த மூன்றாவது நாளே, அதே கோவையில், பெண் கடத்தப்படும் சிசிடிவி காட்சி வெளிவருவது,

திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட சட்டத்தின் மீதோ, காவல்துறை நடவடிக்கை மீதோ அச்சமே இல்லை என்பதையே காட்டுகிறது. எந்த நேரத்திலும், எங்கும் பெண்களால் நிம்மதியாக, பாதுகாப்பாக இருக்க முடியாத ஒரு பதற்றமான நிலையை உருவாக்கிவிட்டு, இந்த விடியா அரசை "பெண்களுக்கான அரசு" என்று கூறுவதற்கு பொம்மை முதல்வரும், அவரது மகனும் கூச்சப்பட வேண்டும்.

ஸ்டாலின் அவர்களே! தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று உங்கள் பெயருக்கு பின்னால் வைத்துள்ள நீங்கள், தமிழ்நாட்டின் பெண்கள் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டாமா? மேற்கூறிய சம்பவங்கள் குறித்து உரிய விசாரணையை துரிதப்படுத்தி, பெண்களைக் கண்டுபிடித்து, குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Amid reports of a woman being abducted in a car in Coimbatore, Opposition Leader Edappadi Palaniswami has questioned, "Is Tamil Nadu Safe For Women?"

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in