அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை விலக்கியது ஏன்?: எடப்பாடி பழனிசாமி விளக்கம் | Edappadi Palaniswami |

ஆறு மாத காலமாக கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார் செங்கோட்டையன்...
எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு
எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு
2 min read

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் இணைந்து செயல்படுவதாகச் செங்கோட்டையன் கூறியதால்தான் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது என் முடிவு அல்ல, மூத்த தலைவர்களுடன் கலந்து பேசி, சட்ட விதியின் படிதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், இந்த நடவடிக்கை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

“அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கான பாராட்டு விழாவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இல்லை என்று தவறான கருத்தைச் சொல்லி, அதனால்தான் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று செங்கோட்டையன் கூறினார். அது பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்களை அழைத்து விவசாயிகள் நடத்திய நிகழ்ச்சி என்பதால்தான் அதில் படங்கள் இடம்பெறவில்லை. அதே வேளையில் செங்கோட்டையன் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் எங்கே இருந்தன? கருணாநிதி, ஸ்டாலின் படங்கள்தான் இருந்தன. அப்போதிலிருந்தே திமுகவின் பி டீமாகச் செயல்படத் தொடங்கிவிட்டார் செங்கோட்டையன். ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்காக அந்தக் காரணத்தைச் சொன்னார். ஆனால் உண்மை வெளி வந்துவிட்டது. இப்படிப்பட்டவர்தான் செங்கோட்டையன்.

அவர் இணைக்க வேண்டும் என்று கூறியவர்கள் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அல்ல, அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள். அதற்காக அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் கட்சி விரோதச் செயலுக்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. கழகத்தின் நன்மையைக் கருதி கழகச் சட்ட விதி 35-ன் படி, ஓ. பன்னீர்செல்வத்தை உடனடியாக கழகப் பொருளாளர் பொறுப்பு, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைப்பதோடு, அவருடன் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று இந்தப் பொதுக்குழுவில் தீர்மானிக்கப்படுகிறது என்பது பதிவாகியுள்ளது.

கிட்டத்தட்ட 2500 பொதுக்குழு உறுப்பினர் ஒன்றுகூடி ஏக மனதுடன் நிறைவேற்றிய தீர்மானம் இது. அதற்கு எதிராகச் செயல்பட்டால் தலைமை என்ன முடிவு எடுக்கும்? இது அவருக்குத் தெரியாதது கிடையாது. ஒரு பொதுக்குழு எடுக்கிற முடிவு இறுதியான முடிவு. அந்தப் பொதுக்குழு எடுக்கின்ற முடிவுக்கு கட்டுப்பட்டுத்தான் அனைவரும் செயல்படுகிறோம். அந்த அடிப்படையில்தான் இன்றைய தினம் பொதுக்குழு எடுக்கப்பட்ட முடிவின்படி அடிப்படை உறுப்பிலிருந்து நீக்கப்பட்டவரோடு இணைந்து செயல்படுவோம் என்று அறிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது நான் மட்டும் எடுத்த முடிவு அல்ல. மூத்த தலைவர்களுடன் கலந்து பேசி, சட்ட விதிப்படிதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையன் எப்போது பார்த்தாலும் அவர் ஜெயலலிதாவின் விசுவாசி என்று சொல்கிறாரே, விசுவாசியாக இருந்தால் அவரை ஏன் அமைச்சர் பதவியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார்? அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவருக்கு எனது அமைச்சரவையில் இடம் கொடுத்தேன். செங்கோட்டையன் கடந்த ஆறு மாத காலமாக கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். அதனால்தான் இன்று அவர் நீக்கப்பட்டுள்ளார்” என்றார்.

Summary

Sengottaiyan has been expelled from the AIADMK because he stated that he would join and work with those who have been removed from the party. This is not my decision alone; it has been taken after consulting with senior leaders and in accordance with the party's rules and bylaws, said AIADMK General Secretary Edappadi Palaniswami.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in