
அதிமுக நிர்வாகிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"சிவகங்கை மாவட்டம், சிவகங்கை தெற்கு ஒன்றியம், மாத்தூர் ஊராட்சி அதிமுக நாட்டாக்குடி கிளைச் செயலாளர் ஆர். கணேசனை இன்று அதிகாலை மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்கள். நாட்டாக்குடி கிராமத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கோயில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்ட நிலையில், காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தால், இப்படுகொலையைத் தடுத்திருக்கலாம்.
மற்றொரு நிகழ்வில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர 7-வது வார்டு கழகச் செயலாளர் பி. ரமேஷ் என்பவரை, திமுக நகர மன்ற வார்டு உறுப்பினரின் கணவர் கோவி. சக்தி மற்றும் இரண்டு நபர்கள் முன்விரோதம் காரணமாக நேற்றிரவு ஆயுதங்கள் கொண்டு பலமாக தாக்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த ரமேஷ், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எங்களது கட்சி நிர்வாகிகள் மீது முன்பகையுடன் அவர்கள் தாக்கப்படுவதற்கான அபாயம் உள்ளது என்ற நிலையில் எதிரிகளை முன்னெச்சரிக்கையாக கைது மற்றும் எச்சரிக்கை செய்யாத நிலையில், எங்களது கட்சி நிர்வாகிகள் மீது கொலை மற்றும் கொலை வெறித் தாக்குதல்கள் நடந்தேறியுள்ளன. இதற்கு அந்தந்த மாவட்டக் காவல் துறையே பொறுப்பாகும். காவல் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலின் இனியாவது விழித்துக்கொண்டு, தமிழகம் முழுவதும் இதுபோன்ற முன்விரோதத் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுப்பதற்குப் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.