
தமாகா நிறுவனர் ஜி.கே. மூப்பனார் நினைவேந்தல் நிகழ்வில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலையும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருந்தது பேசுபொருளாகியுள்ளது.
மறைந்த தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் 24-வது நினைவு தினம் இன்று (ஆக. 30) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை தேனாம்பேட்டை ஜி.என். செட்டி சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் நினைவேந்தல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜி.கே. மூப்பனாரின் மகனும், தமாகாவின் தலைவருமான ஜி.கே. வாசன் தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருவதால், இந்த நினைவேந்தல் நிகழ்வுக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை, தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நினைவேந்தல் நிகழ்ச்சிக்காக மேடையில் போடப்பட்டிருந்த இருக்கைகளில் எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் அருகருகே அமர்ந்திருந்தனர். மேலும் ஜி.கே. மூப்பனார் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தவும் இருவரும் ஒன்றாகவே சென்றனர்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அன்றைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தொடர் விமர்சனத்தால் அதிருப்தியடைந்த காரணத்தால், பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியேறியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலையை மாற்ற முடிவெடுத்த பிறகே, மீண்டும் பாஜக அதிமுக கூட்டணி அமைந்தது.