
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முன்வைத்த விமர்சனத்துக்கு பதிலளித்துள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
திருநெல்வேலியில் நேற்று (அக்.20) நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியவை பின்வருமாறு:
`ஆட்சிப் பொறுப்பேற்று 40 மாதங்களில் அவரது மகனை துணை முதல்வர் ஆக்கியதுதான் ஸ்டாலின் செய்த ஒரே சாதனை. 1989-ல் நான் முதல்முறையாக எம்.எல்.ஏ.வாக பதவியேற்றபோது, ஸ்டாலினும் முதல்முறையாக எம்.எல்.ஏ.வானார். அதற்கு பிறகு 20 ஆண்டுகாலம் எம்.எல்.ஏ., மேயர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் என பல பொறுப்புகளில் இருந்தபிறகே ஸ்டாலின் முதல்வரானார்.
ஆனால் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அரசியலுக்கு வந்த உடனேயே எம்.எல்.ஏ. ஆனார், அதன்பிறகு ஒரே வருடத்தில் அமைச்சர் ஆனார், பிறகு ஒன்றரை வருடத்தில் துணை முதல்வர் ஆனார். எத்தனையோ மூத்த அமைச்சர்கள் இருக்கின்றனர். துணை முதல்வர் பொறுப்பு சாதாரண விஷயம் இல்லை.
நாட்டு மக்களின் பிரச்னைகள் தெரிந்திருக்கவேண்டும். அனுபவம் மிக்க நபராக இருக்கவேண்டும், அப்போதுதான் எவ்வாறு ஆட்சி செய்தால் தமிழக மக்கள் பயனடைவார்கள் என்ற பக்குவம் இருக்கும். இதெல்லாம் உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கிறதா?’ என்றார்.
இன்று (அக்.21) மதுரை விமான நிலையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியவை பின்வருமாறு:
`2016-ல் முன்னாள் ஜெயலலிதா இறந்தபிறகு முதல்வர் பதவிக்கான போட்டியில் பல மூத்த அமைச்சர்கள் இருந்தனர். செங்கோட்டையன்தான் அமைச்சர் பதவியேற்கவேண்டும் என பலரும் கூறினார்கள். செம்மலை, திண்டுக்கல் சீனிவாசன், பண்ருட்டி ராமசந்திரன் என பலர் இருக்கும்போது எடப்பாடி பழனிசாமி எவ்வாறு முதல்வர் ஆனார் என்று தொலைக்காட்சியில் மக்கள் பார்த்தனர்.
கூவத்தூரில் இவர்கள் அடித்த கூத்து, இவர் எவ்வாறு எல்லோரையும் தாண்டி முதல்வர் ஆனார் என்று மக்கள் பார்த்தார்கள். எனவே மற்றவர்களை விமர்சிக்கும் முன்பு அவர் யோசித்துப் பார்த்துவிட்டு பேசவேண்டும். இது எனக்கு கொடுக்கப்பட்ட பதவி அல்ல, இதை ஒரு பொறுப்பாகவே நான் உணர்கிறேன்.
ஜெயலலிதா மறைந்த பிறகு ஆட்சியை 4 ஆண்டுகள் கொண்டு செல்லவேண்டும் என்ற காரணத்தால் முதல்வர், துணை முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர் செல்வமும் பங்கு போட்டுக்கொண்டனர். ஆட்சியை இழந்தபிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். இந்த நிலைமை திமுகவுக்கு எப்போதும் வராது’ என்றார்.