மக்களவை தேர்தல் தோல்வி: இபிஎஸ் ஆலோசனை

கட்சி ஆரம்பித்து 50 வருடங்கள் கடந்த நிலையில் முதல் முறையாக இந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட 7 அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர்
மக்களவை தேர்தல் தோல்வி: இபிஎஸ் ஆலோசனை
1 min read

18-வது மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி தொடர்பாக ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

மக்களவை தேர்தலில் கட்சி அடைந்த தோல்வி குறித்து இன்று (ஜூலை 10) தொடங்கி, ஜூலை 19 வரை மக்களவை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளைத் தலைமை அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. இன்று காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

18-வது மக்களவைத் தேர்தலை தேமுதிக, புதிய தமிழகம் எஸ்டிபிஐ போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சந்தித்தது அதிமுக. இதில் கூட்டணி கட்சிகளுக்கு 7 இடங்களை ஒதுக்கிவிட்டு, 32 இடங்களில் போட்டியிட்டது அதிமுக. ஆனால் போட்டியிட்ட ஒரு இடங்களில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை. மேலும் இந்தத் தேர்தலில் அதிமுக பெற்ற வாக்கு சதவீதம் 20 ஆக குறைந்தது.

அதைவிட முக்கியமாக போட்டியிட்ட 32 தொகுதிகளில், 7 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது அதிமுக. கட்சி தொடங்கி 50 வருடங்கள் கடந்த நிலையில், மொத்தம் 13 மக்களவைத் தேர்தல்களை சந்தித்துள்ளது அதிமுக. ஆனால் முதல் முறையாக இந்தத் தேர்தலில் போட்டியிட்ட 7 அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர். இது கட்சியினர் மத்தியில் பேசு பொருளானது.

மேலும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் போன்றோர் எடப்பாடி பழனிசாமி கட்சியை அழித்து வருவதாக கடந்த சில நாட்களாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கட்சியினருடன் மக்களவை தேர்தல் தோல்வி குறித்து இபிஎஸ் ஆலோசனை மேற்கொள்ள இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in