
டாஸ்மாக் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது தொடர்பாக அமலாக்கத் துறை மேற்கொண்டு விசாரணை மேற்கொள்ளத் தடை விதிக்க வேண்டும் என டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபானக் கொள்முதல், மதுக்கூடங்கள் ஒதுக்கடு செய்வது, மதுபானம் விற்பனை உள்ளிட்டவற்றில் முறைகேடு நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் டாஸ்மாக் தொடர்புடைய பல்வேறு இடங்களில் மார்ச் இரண்டாவது வாரத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. டாஸ்மாக் தலைமையகம், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான மதுபான நிறுவனம் என தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களில் மூன்று நாள்கள் சோதனை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, கடந்த 13 அன்று சோதனை குறித்து அறிக்கை வெளியிட்ட அமலாக்கத் துறை, டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டது. அமலாக்கத் துறையின் இந்தக் குற்றச்சாட்டை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முற்றிலுமாக மறுத்தார்.
அமலாக்கத் துறை சொல்லியிருக்கும் ரூ. 1,000 கோடி முறைகேடு என்பது, எவ்வித முகாந்திரமும் இல்லாமல் சொல்லப்பட்டுள்ளதாக செந்தில் பாலாஜி விமர்சித்தார். இதுதொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயார் என்றும் செந்தில் பாலாஜி உறுதிபடத் தெரிவித்தார்.
இந்நிலையில், டாஸ்மாக் தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.