மார்ச் 17-ல் டாஸ்மாக் தலைமையகத்தில் மாபெரும் ஆர்ப்பாடடம்: அண்ணாமலை

"செந்தில் பாலாஜியின் பிணையை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை அமலாக்கத் துறை மேற்கொள்ள வேண்டும்."
மார்ச் 17-ல் டாஸ்மாக் தலைமையகத்தில் மாபெரும் ஆர்ப்பாடடம்: அண்ணாமலை
ANI
2 min read

மார்ச் 17 அன்று டாஸ்மாக் தலைமையகத்தில் மாபெரும் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை சார்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது பெரும் பேசுபொருளானது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அமலாக்கத் துறை குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயார் என்று அவர் அறிவித்தார்.

மேலும், "அவர்கள் சொல்லியிருக்கும் ரூ. 1,000 கோடி முறைகேடு என்பது, எவ்வித முகாந்திரமும் இல்லாமல் சொல்லப்பட்டுள்ளது. ரூ. 1,000 கோடி என்பதை முன்பே ஒருவர் பேட்டியில் சொல்கிறார். பின்னர், அமலாக்கத் துறை அதே ரூ. 1,000 கோடி என்ற அறிக்கையில் பதிவிட்டு ரூ. 1,000 கோடி என்று கருத்தை முன்வைக்கிறார்கள். இதில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கியிருக்கிறது" என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, இதுதொடர்பாக மேற்கொண்டு விளக்கமளித்தார்.

அவர் கூறியதாவது:

"டாஸ்மாக் தொடர்பாக ரூ. 1,000 கோடி முறைகேடு என அண்ணாமலை சொல்வதையே அமலாக்கத் துறையும் எப்படி சொல்கிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்கிறார். அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றபோது, அதுதொடர்பாக ரூ. 1,000 கோடி என்பதைக் குறிப்பிட்டு ஆங்கில ஊடகம் ஒன்றில் கட்டுரை வந்துள்ளது. இதைத் தாண்டி சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சத்தீஸ்கரைத் தாண்டி மிகப் பெரிய ஊழல் ஒன்று நடந்துள்ளது. இவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

டாஸ்மாக் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது தொடர்பாக நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள். இதில் சம்பந்தப்பட்ட எல்லோரையும் கைது செய்ய வேண்டும். குறிப்பாக, செந்தில் பாலாஜியின் பிணையை ரத்து செய்வதற்கான நடவடிக்கையை அமலாக்கத் துறை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்துத் துறை ஊழல் தொடர்பாக கைதாகி பிணையில் வெளியே வருகிறார். அவர் பிணையில் வெளியே உள்ளார். பிணையில் வெளிவந்தவுடன் அமைச்சரானது எப்படி என உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியது. வெளியில் அமைச்சராக இருக்கக்கூடியவரின் நிறுவனம், துறை இரண்டாவது முறையாக இன்று அமலாக்கத் துறை வளையத்துக்குள் வருகிறது. எனவே, அமலாக்கத் துறை தான் இந்த நடவடிக்கையைத் தொடர வேண்டும்.

வரும் 17 அன்று பாஜக ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். சென்னை எழும்பூரிலுள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போகிறோம். சென்னையில் இந்த ஆர்ப்பாட்டம் முடிந்தபிறகு, தமிழகத்தில் ஒரு வாரத்துக்குப் பிறகு 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகளையும் முற்றுகையிடும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருக்கிறோம். மாநில அரசு பதில் சொல்லும் வரை எங்களுடைய ஆர்ப்பாட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும். இந்த அமைச்சர் பதவியிலிருந்து வெளியே செல்லும் வரை, அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையை முழுமையாகத் தாக்கல் செய்து சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யும் வரை இது தொடரும்.

அமலாக்கத் துறை எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்கிறோம். இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார் அண்ணாமலை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in