தொழிலதிபர் லாட்டரி மார்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் இன்று (நவ.14) காலை தொடங்கி அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்டினுக்குச் சொந்தமான கோவை துடியலூரில் உள்ள வீடு, மார்டின் குழும அலுவலகங்கள் மற்றும் சென்னையில் உள்ள அலுவலங்களில் இன்று காலை தொடங்கி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஃபியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் தொழிலதிபர் லாட்டரி மார்டின். இதன் வழியாக ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி தொழில்களை அவர் நடத்தி வருகிறார். மார்டினின் மேற்கு வங்க அலுவலகத்திலும் இன்று சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம் மார்டினின் மருமகனும், விசிக துணைப் பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜுனாவுக்குச் சொந்தமான சென்னை போயஸ் கார்டன் இல்லம் மற்றும் தி.நகர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் இன்று காலை 5.30 மணி முதல் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது மீண்டும் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் வங்கிக் கணக்குகள், பணப்பரிவர்த்தனைகள் உள்ளிட்ட விவரங்களை அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.