அமலாக்கத்துறை சோதனை எனக்கானது அல்ல: ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட முடிவெடுத்தபோதே நான் எனது தொழில் நிறுவனங்களின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிவிட்டேன்.
அமலாக்கத்துறை சோதனை எனக்கானது அல்ல: ஆதவ் அர்ஜுனா விளக்கம்!
1 min read

தன் இல்லத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை தனக்கானது அல்ல என, கடந்த இரு நாட்களாக நடைபெற்றுவந்த அமலாக்கத்துறை சோதனை குறித்து விளக்கமளித்துள்ளார் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா.

கடந்த நவ.14 மற்றும் 15 என இரண்டு நாட்களாக சென்னை மற்றும் கோவையில் லாட்டரி அதிபர் மார்டின், அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் இன்று (நவ.16) ஆதவ் அர்ஜுனா பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,

`அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட முடிவெடுத்தபோதே நான் எனது தொழில் நிறுவனங்களின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிவிட்டேன். தற்போது நான் வருவாய் ஈட்டக்கூடிய எந்த தொழிலிலோ, அது சார்ந்த பொறுப்பிலோ இல்லை. அமலாக்கத்துறை சோதனை எனக்கானது அல்ல.

அமலாக்கத்துறையின் சோதனை ஆணையில் (SEARCH ORDER) எனது பெயரில் இல்லை என்பதையும், அரசின் விசாரணை அமைப்புகளில் என்மீது எந்த புகார்களும், வழக்குகளும் இல்லை என்பதையும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். எக்காலத்திலும் சட்டத்திற்கு எதிரான எந்த பணிகளிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை.

சோதனையின்போது அதிகாரிகள் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் உரிய முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டு சோதனை நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனை குறித்து, சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பத்திரிக்கையாளர் அல்லாத நபர்கள் மற்றும் சித்தாந்த ரீதியாக எங்களுடன் முரண்பட்டவர்கள் மூலம் எனக்கு எதிரான அவதூறான கட்டுக்கதைகளும், உண்மைக்கு மாறான தகவல்களும் பரப்பப்பட்டு வருகிறது.

சமத்துவ சித்தாந்த கருத்தியலில் பயணிக்கத் துவங்கி, தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் நடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில், தேர்தல் வியூக வகுப்பாளராக கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் கொண்ட கொள்கைக்காகவும், மக்களுக்கான அரசை உருவாக்கவும் களப்பணியாற்றியுள்ளேன்.

அந்த பயணத்தின் நீட்சியாக இப்போது நேரடி அரசியலிலும் களமிறங்கியுள்ள எனக்கு இது போன்றவர்களின் எதிர்மறையான கருத்துக்கள் எனது அரசியல் சிந்தனைக்கு மேலும் உத்வேகம் அளிக்குமே தவிர, ஒருபோதும் எனது அரசியல் பயணத்திற்குத் தடையாக மாறாது. என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை.

புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் சமத்துவ சித்தாந்தத்தின் வழியில் மத பெரும்பான்மைவாதம், சாதிய ஆதிக்கம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக, தனிமனித சுதந்திரம், சமூக நீதி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் உள்ளிட்டவற்றிற்கான எனது பிரச்சாரப் பயணத்தில் கவனம் சிதறாமல் வெற்றி பெற்றதை போல புதிய அரசியல் பாதையை உருவாக்குவோம்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in