இன்று (அக்.23) காலை தொடங்கி முன்னாள் அதிமுக அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2011 முதல் 2016 வரையிலான ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக செயல்பட்டார் வைத்திலிங்கம்.
அமைச்சர் பதவியில் இருந்தபோது 1058 % வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், தாம்பரத்துக்கு அருகே உள்ள பெருங்களத்தூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்கான அனுமதியை தர சுமார் ரூ. 27 கோடி லஞ்சம் பெற்றதாகவும், கடந்த செப். மாதத்தில் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் பிரபு, சண்முக பிரபு ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், லஞ்சம் பெற்ற பணத்தை சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுத்தியதாகக் கூறி, தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரத்தநாட்டுக்கு அருகே இருக்கும் தெலுங்கன் குடிகால் பகுதியில் அமைந்துள்ள வைத்திலிங்கத்தின் இல்லத்தில் இன்று காலை 7.30 மணிக்குத் தொடங்கி 15-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
அதே நேரத்தில், தஞ்சாவூரில் உள்ள வைத்திலிங்கத்தின் மகன் பிரபுவின் இல்லம் மற்றும் சென்னையில் வைத்திலிங்கத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர் விடுதி ஆகிய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.
ஒரத்தநாடு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள வைத்திலிங்கம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக உள்ளார்.