சென்னை, கோவையில் லாட்டரி அதிபர் மார்டின் தொடர்புடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று ( நவ.14) அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றதை அடுத்து, தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது.
சிக்கிம் அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்று வருமானம் ஈட்டியதாக கடந்த 2019-ல் பிரபல தொழிலதிபர் மார்டின் மீது புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரூ. 910 கோடி அளவுக்கு மாட்டின் முறைகேடாக வருமானம் ஈட்டியது தெரியவந்தது.
இதனை அடுத்து சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த அமலாக்கத்துறையினர், மார்டினின் அசையும், அசையாத சொத்துகள் சிலவற்றை முடக்கினர். இதை அடுத்து கடந்த ஆண்டு மே மாதத்தில் மீண்டும் மார்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி, அவருக்கு சொந்தமான சொத்துகள் சிலவற்றை முடக்கினர்.
இந்நிலையில் நேற்று (நவ.15) கோவையில் உள்ள மார்டினின் வீடு, அவரது அலுவலகம், ஹோமியோபதி கல்லூரி மற்றும் சென்னை போயஸ் கார்டனில் உள்ள மார்டினின் வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது மருமகனும், விசிக துணை பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனாவின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
சிக்கிம், மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள மார்டினுக்கு சொந்தமான அலுவலகங்களிலும் சோதனை நடந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த சோதனைகளின்போது தேர்தல் நன்கொடை பத்திரங்கள் தொடர்பான ஆவணங்களும், பல நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் தொடர்பான ஆவணங்களும் அமலாக்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று (நவ.15) மீண்டும் மார்டின் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே கைப்பற்ற ஆவணங்கள் குறித்த முழு விவரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.