

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் இதுவரை 6,00,54,300 கணக்கெடுப்புப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிஹார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைத் தொடர்ந்து, தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெறும் என்று கடந்த அக்டோபர் 24 அன்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் அறிவித்தார். அதனடிப்படையில் நவம்பர் 4 முதல் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வீடுகள் தோறும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் கணக்கெடுப்புப் படிவங்களை விநியோகித்து, ஆவணங்களைச் சரிபார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 6,00,54,300 கணக்கெடுப்புப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“தமிழ்நாட்டில் மொத்தம் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளார்கள். இவர்களுக்காக 6,41,14,583 கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு, இதுவரை 6,00,54,300 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும், 2,37,390 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
தமிழ்நாடு, அந்தமான் நிக்கோபார், சத்தீஷ்கர், கோவா, குஜராத், கேரளா, லட்சத்தீவு, மத்திய பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் டிசம்பர் 4 வரை நடைபெறுகிறது. அக்டோபர் 27 நிலவரப்படி சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 50,99,72,687 ஆக உள்ளது. இதில், 50,97,43,180 கணக்கெடுப்பு படிவங்கள் (99.95%) அச்சிடப்பட்டு, அவற்றில் இதுவரை 49,73,39,480 கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளில் மொத்தமாக 5,33,093 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும், 10,41,291 வாக்குச்சாவடி முகவர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Election Commission has stated that 6.54 crore enumeration forms have been distributed so far in the ongoing special intensive revision in Tamil Nadu.