மருத்துவ சிகிச்சைக்குப் பணம் கொண்டு சென்றால் வாட்ஸ்ஆப் ஆதாரம் போதும்: தேர்தல் ஆணையம் விளக்கம் | ECI |

இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஊடகங்கள் கூடுதல் விழிப்புணர்வை வழங்க வேண்டும்....
மருத்துவ சிகிச்சைக்குப் பணம் கொண்டு சென்றால் வாட்ஸ்ஆப் ஆதாரம் போதும்: தேர்தல் ஆணையம் விளக்கம்
மருத்துவ சிகிச்சைக்குப் பணம் கொண்டு சென்றால் வாட்ஸ்ஆப் ஆதாரம் போதும்: தேர்தல் ஆணையம் விளக்கம்
1 min read

மருத்துவ செலவுக்காக ரூ. 50,000-க்கு மேல் பணம் கொண்டு செல்வோர் அதற்கான ஆதாரங்களை வாட்ஸ்ஆப்பில் வைத்திருந்தால் போதுமானது என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெறுகிறது. இது தொடர்பான அறிவிப்பு கடந்த மார்ச் 15 அன்று வெளியானது. அன்று முதல் மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. குறிப்பாக, ரூ.50,000-க்கும் மேல் பணம் கொண்டு செல்வோர் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் பணம் பறிமுதல் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

பறக்கும் படையினர் தீவிரம்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து, தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் ரூ.50,000-க்கு மேல் பணம் எடுத்துச் செல்பவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, ஆதாரம் இல்லை என்றால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொது மக்களுக்கு இது அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக பல்வேறு புகார்களும் எழுந்தன. இந்நிலையில், தற்போது பொதுமக்களுக்கு உதவும் வகையில் மருத்துவ காரணத்திற்காக பணத்தை எடுத்துச் சென்றால் அதற்கான ஆதாரத்தை வாட்ஸ்ஆப் வழியாகவும் காட்டலாம் என்று தமிழ்நாடு தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தேர்தல் அதிகாரி விளக்கம்

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

ஆவணங்களைப் பொறுத்தவரை பணம் பெறுபவரின் விவரங்களைக் கூட ஆதாரமாகக் காட்டலாம். பெரும்பாலும் கிராமப் புறங்களில்தான் இத்தகைய பிரச்னை எழுந்து வருகிறது. சந்தையில் வியாபாரம் செய்துவிட்டுத் திரும்புவோரிடம் போதிய ஆதாரங்கள் கிடைப்பதில்லை. ஆனால், மக்களை தொல்லை செய்யக்கூடாது என பறக்கும் படைக்கு அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவக் காரணத்திற்காக பொதுமக்கள் ரூ.50,000க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் அதற்கான மருத்துவச் சீட்டு உள்ளிட்ட ஆதாரத்தை வாட்ஸ்ஆப் அல்லது டிஜிட்டல் முறையில் கூட காட்டலாம். அவ்வாறு காண்பித்தால் பணம் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர். இது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஊடகங்கள் கூடுதல் விழிப்புணர்வை வழங்க வேண்டும்.

நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவை அதிகரிக்க முயற்சி

நகர்ப்புற பகுதிகளில் வாக்குப்பதிவை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை எடுக்கிறது. தமிழ்நாட்டில் எப்போதும் நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவும் மிகக் குறைவாகவே இருக்கிறது. வெறுப்பு பிரசாரங்களை கண்காணிக்க பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. ரூ.50,000க்கு மேல் அனுமதிக்க வேண்டும் என்ற வணிகர்களின் கோரிக்கையை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும்” என்றார்.

Summary

Tamil Nadu Chief Electoral Officer Archana Patnaik has said that those carrying more than Rs 50,000 for medical expenses can keep proof of the same on WhatsApp.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in