தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு | TVK |

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்...
தவெக தலைவர் விஜய் (கோப்புப்படம்)
தவெக தலைவர் விஜய் (கோப்புப்படம்)
1 min read

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே மாதம் நடத்தப்படவுள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்தத் தேர்தலில் முதன்முறையாக தமிழக வெற்றிக் கழகம் கட்சி மூலம் நடிகர் விஜய் போட்டியிடுகிறார். சமீப காலமாக ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் விவகாரம், சிபிஐ விசாரணை என்று விஜய் தொடர் நெருக்கடிகளைச் சந்திந்து வருகிறார். மேலும் அவரது கட்சியில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சின்னம் ஒதுக்கக் கோரிக்கை

இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சின்னம் ஒதுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் கடந்த ஆண்டு மனு அளிக்கப்பட்டது. அப்போது விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, வெற்றிக் கோப்பை உட்பட 10 விருப்பச் சின்னங்கள் பட்டியலிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில் முதன்மைக் கோரிக்கையான விசில் சின்னத்தை ஒதுக்கி, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2026 தேர்தலுக்கு மட்டுமே ‘விசில்’

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிக்கும் ஒரே பொது சின்னமாக விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அங்கீகாரம் பெறாத, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்பதால், இந்த சின்னம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பிரவீன் சக்கரவர்த்தி கருத்து

இதையடுத்து சமீப காலமாக விஜய்க்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வரும் காங்கிரஸ் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி சமூக ஊடகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக விசில் அடிக்கப்பட்டுவிட்டது. இனி அனைத்துக் கட்சிகளும் ஓடுவதற்குத் தயாராக வேண்டும்” என்று விசில் சின்னத்தைக் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு தரப்பு தவெகவுடன் கூட்டணியில் இணைய விரும்புவதாகக் கூறப்படும் நிலையில், பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்து பேசுபொருளாகியுள்ளது.

Summary

The Election Commission of India has announced that it will allocate the whistle symbol to Vijay's Tamil Nadu Victory Party for the 2026 assembly elections.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in